இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாக்சிங்டே டெஸ்ட்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி கறுப்பு பட்டை அணிந்து விளையாடி வருகிறது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்சிஜி) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் IND vs AUS பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியின் (BGT) நான்காவது டெஸ்டின் 2ஆம் நாள் (டிசம்பர் 27, வெள்ளிக்கிழமை) ஆட்டத்தில், இந்திய வீரர்கள் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் தங்கள் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து களத்தில் இறங்கினர்.
மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரை இரண்டு முறை இந்தியாவின் பிரதமர் பொறுப்பையும், நிதியமைச்சராகப் பொருளாதாரத்தை தாராளமயமாக்கியதில் முக்கிய பங்கையும் பெற்றவர், வீட்டில் திடீரென சுயநினைவு இழந்ததையடுத்து, வியாழக்கிழமை பிற்பகுதியில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 92 வயதான நிலையில் 'வயது தொடர்பான மருத்துவ பிரச்சினைகளுக்கு' அவர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை கூறியது, ஆனால் மருத்துவர்களின் அனைத்து முயற்சிகளையும் மீறி இரவு 9:51 மணிக்கு அவர் உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
"ஆழ்ந்த துக்கத்துடன், இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங், 92 வயதில் மறைந்ததைத் தெரிவித்துக் கொள்கிறோம். வயது தொடர்பான உடல்நலக் குறைபாடுகளுக்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார், டிசம்பர் 26 அன்று வீட்டில் திடீரென சுயநினைவு இழந்தார். அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் உடனடியாக வீட்டில் இருந்தபடியே வழங்கப்பட்டது. பின்னர் இரவு 8:06 மணிக்கு, எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டாலும், அவரது உடல் மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சையை ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து இரவு 9:51 மணிக்கு இறந்தார்." என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
IND vs AUS பாக்சிங் டே டெஸ்டில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 19 வயதான அறிமுக ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொண்டு, ஒரு ஓவரில் 16 ரன்களும், மற்றொரு ஆட்டத்தில் 18 ரன்களும் எடுத்ததன் மூலம் MCG கூட்டத்தை திகைக்க வைத்தார். கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து முக்கியப் பங்காற்றினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணி உணவு இடைவேளையின் போது 7 விக்கெட் இழப்புக்கு 454 ரன்கள் எடுத்து வலுவான இடத்தை எட்டி உள்ளது.
