ஆக்ரோஷம் மட்டும் போதுமா டிஎஸ்பி?; ஆஸி. மண்ணில் 'தடுமாறும்' சிராஜ்; என்ன காரணம்? முழு அலசல்!
இந்திய வீரர் முகமது சிராஜ் ஆஸ்திரேலிய தொடரில் விக்கெட் எடுக்க தடுமாறி வருகிறார். அவர் தடுமாறுவது ஏன்? என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
Mohammed Siraj Bowling
ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் அதிரடி
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 'பாக்சிங் டே டெஸ்ட்' எனப்படும் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. பின்பு முதல் இன்னிங்சை ஆடி வரும் இந்திய அணி 164 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. இந்திய டாப் ஆர்டர்கள் பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம் ஒருபக்கம் இருக்க, வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா அடித்த 474 ரன்கள் என்பது மிகப்பெரும் ஸ்கோராகும்.
அதுவும் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழந்து 311 ரன்கள் எடுத்திருந்தபோது, 2ம் நாளின் முதல் செஷனில் 400 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி விடும் என கருதப்பட்ட நிலையில், மேற்கொண்டு அந்த அணி 163 ரன்கள் சேர்த்தது இந்திய அணியின் பவுலிங் பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதுவும் 7வது விக்கெட்டுக்கு பவுலர் பேட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித் ஜோடி அதிரடியாக 25 ஓவர்களில் 120 ரன்களுக்கு மேல் அடித்ததை ஆஸ்திரேலிய ரசிகர்களே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
Mohammed siraj struggling
வாரி வழங்கும் வள்ளல்
இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பாஸ்ட் பவுலர் முகமது சிராஜ் என்று சொன்னால் அது மிகையாகாது. நேற்று முதல் செஷனில் பும்ராவின் பந்தை சுதாரித்து ஆடிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஆகாஷ் தீப், சிராஜின் பந்துகளை வெளுத்துக்கட்டி விட்டனர். இந்த தொடரில் 2வது போட்டியில் ஆடும் ஆகாஷ் தீப் மெச்சும்படி பந்துவீசவில்லை என்றாலும் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் வீழ்த்தினார்.
ஆனால் தொடரின் தொடக்கம் முதலே விளையாடி வரும் சிராஜ் முதல் இன்னிங்சில் 23 ஓவர்களில் ஓவருக்கு 5.30 ரன்கள் வீதம் 122 ரன்கள் விட்டுக்கொடுத்ததுடன் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் தடுமாறியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஒருபக்கம் பும்ரா புதிய பந்து, பழைய பந்து என எந்த பந்தை கையில் கொடுத்தாலும் விக்கெட்கள் எடுக்க, மறுபக்கம் சிராஜ் ரன்களை வாரி வழங்குவது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகி விடுகிறது.
நேற்று பிளேயர், இன்று ரசிகர்: மைதானத்தில் கூச்சலிட்ட ரசிகரால் கடுப்பான விராட் கோலி
India vs Australia Test Series
தடுமாறும் சிராஜ்
வேகத்துக்கு கைகொடுக்கும் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் 5 விக்கெட் வீழ்த்தி ஓரளவு நல்ல பார்மில் இருந்த சிராஜ், அடுத்தடுத்த டெஸ்ட்களில் அதளபாதாளத்துக்கு சென்று விட்டார். அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் 4 விக்கெட் வீழ்த்தி இருந்தாலும் 24 ஓவரில் 98 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அதுவும் டிராவிஸ் ஹெட் விக்கெட் தவிர மற்ற அனைவரும் பவுலர்களே. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட்டிலும் முதல் இன்னிங்சில் சிராஜ் எடுத்த 2 விக்கெட்டும் பவுலர்கள்தான். 2வது இன்னிங்சில் 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
இந்த தொடரில் சிராஜ் 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளாரே, பிறகு அவர் மோசமாக செயல்படுகிறார் என்று எப்படி சொல்ல முடியும்? என நீங்கள் கேட்கலாம். சிராஜ் எடுத்த 13 விக்கெட்களில் கிட்டதட்ட 60% டெயிலெண்டர்கள் எனப்படும் பவுலர்கள் தான். முதல் டெஸ்ட்டை தவிர மற்ற 3 டெஸ்ட்களிலும், அணிக்கு தேவைப்படும் முக்கியமான கட்டத்திலும், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பார்டனர்ஷிப்களை உருவாக்கும் வேளையிலும் அவர் விக்கெட் எடுக்கவில்லை.
India vs australia 4th test
என்ன காரணம்?
மிக முக்கியமாக புதிய பந்தில் அவர் விக்கெட் எடுக்க தடுமாறுவது அப்பட்டமாகத் தெரிகிறது. சிராஜின் பலமே தொடர்ந்து சரியான லைன் அண்ட் லென்த்தில் ஸ்டெம்புகளை குறிவைத்து பந்துவீசுவதுதான். ஆனால் இந்த தொடரில் லைன் அண்ட் லெந்த்தை தவற விட்ட சிராஜ், பேட்ஸ்மேன்கள் எளிதாக அடிக்ககூடிய ஷாட் பிட்ச் பால்களையும், அவுட் சைட் ஆப் ஸ்டெம்ப் பால்களையும் அதிகம் வீசி இருக்கிறார்.
4வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியே பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் ஒன்றிரண்டு பந்துகளை மட்டுமே வீசிய அவர் மற்ற பந்துகளை மிகவும் சாதாரணமாக போட்டதால் எதிரணி பேட்ஸ்மேன்கள் வெளுத்துக் கட்டி விட்டனர். அவர் வீசிய இரண்டு ஷாட் பிட்ச் பந்துகளை ஸ்டீவ் ஸ்மித் சர்வசாதாரணமாக சிக்சர் விளாசியதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
Mohammed siraj wickets
அந்த பழைய சிராஜ் எங்கே?
2020 21 ம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் 3 போட்டிகளில் 13 விக்கெட் எடுத்த சிராஜ், இந்திய அணி தொடரை வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார். அந்த தொடரில் அவர் புதிய பந்தில் ஸ்டெம்புகளை குறி வைத்து சரியான லைன் அண்ட் லென்த்தில் பந்துகளை வீசியதால் ஆஸ்திரேலிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக விக்கெட் இழந்து இந்தியா தொடரை வெல்ல முக்கிய பங்கு வகித்தது.
அந்த பழைய சிராஜ், தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் காணாமல் போனது தான் என்னை போன்ற ரசிகர்களுக்கு வருத்தமாக உள்ளது. விராட் கோலியின் சிஷ்யப் பிள்ளையான சிராஜ், குருவைப் போலவே களத்தில் எதிரணி வீரர்களை சீண்டி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். எந்த ஒரு வீரருக்கும் களத்தில் ஆக்ரோஷம் என்பது அவசியமானதுதான். சிராஜ் தனது ஆக்ரோஷத்தை உத்வேகமாக எடுத்துக் கொண்டு இந்திய அணிக்காக பல முக்கியமான போட்டிகளை வென்று கொடுத்துள்ளார் என்பதை மறுக்க முடியாது.
'பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்'; ஓப்பனிங் இறங்கி அசிங்கப்பட்ட ரோகித்; மோசமான சாதனை!
Ind vs Aus Series
வலிமையாக வாங்க டிஎஸ்பி
ஆனால் நடப்பு ஆஸ்திரேலியா தொடரில் சிராஜிடம் இருந்து வெறும் ஆக்ரோஷம் மட்டுமே வெளிப்படுகிறதே தவிர, அவரின் முழுமையான திறமை வெளிவரவில்லை. டிஎஸ்பி சிராஜ் மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக திரும்பி வந்து இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுக்க வேண்டும் என்பதே பல கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.