'பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்'; ஓப்பனிங் இறங்கி அசிங்கப்பட்ட ரோகித்; மோசமான சாதனை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா 3 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா ரன்கள் குவிப்பு
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 'பாக்சிங் டே டெஸ்ட்' எனப்படும் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அனியின் பேட்ஸ்மேன்கள் சாம் கான்ஸ்டாஸ் (60 ரன்கள்), மார்னஸ் லபுஸ்சேன் (72 ரன்), உஸ்மான் கவாஜா (57 ரன்) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (62 ரன் நாட் அவுட்) ஆகிய 4 பேர் அரைசதம் அடித்தனர். பும்ரா 3 விக்கெடுகள் சாய்த்தார்.
இன்று 2வது நாள் ஆட்டம் நடந்த நிலையில், தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. கவர் டிரைவ், புல் ஷாட்கள் என அற்புதமான ஷாட்களை விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் 33வது சதம் விளாசினார். அவருக்கு பக்கபலமாக இருந்த பேட் கம்மின்ஸ் 49 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ரோகித் சர்மா படுமோசம்
இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 3 விக்கெட்களும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்களும் வீழ்த்தினார்கள். பின்பு இந்திய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய நிலையில், ஓப்பனிங்கில் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா வெறும் 3 ரன்னில் பேட் கம்மின்ஸ் பந்தில் போலண்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதாவது கம்மின்ஸ் வீசிய ஷாட் பிட்ச் பந்தை தேவையில்லாமல் புல் ஷாட் அடிக்க முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ரோகித் சர்மா. இந்த தொடர் முழுவதும் ரன்கள் அடிக்கத் தடுமாறி வரும் ரோகித் சர்மா, பவுலர்கள் போல் கண்மூடித்தனமாக பேட்டை சுழற்றி அவுட் ஆவது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்
ஆஸ்திரேலிய தொடரின் முதல் டெஸ்ட்டில் ஆடாத ரோகித் சர்மா அடுத்த இரண்டு டெஸ்ட்களிலும் 3,6 மற்றும் 10 ரன்கள் என இரட்டை இலக்கத்தை தொட முடியாமல் வெளியேறினார். இப்போது 4வது டெஸ்ட்டிலும் வெறும் 3 ரன்களில் அவுட்டாகியுள்ளார். 2வது, 3வது டெஸ்ட்டில் மிடில் வரிசையில் களமிறங்கிய ரோகித் சர்மா பந்துகளை ஸ்டோக் வைப்பதற்கே மிகவும் சிரமப்பட்டார்.
ஓப்பனிங்கில் அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதால், இன்று 4வது டெஸ்ட்டில் மீண்டும் ஒப்பனிங்கில் களம் கண்டார். இதன் காரணமாக, ஓப்பனிங்கில் சிறப்பாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் ஒன் டவுன் இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆனால் 'இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்' என்பதுபோல் ஓப்பனிங்கில் களம் கண்டு 3 ரன்னில் அவுட்டாகி அசிங்கப்பட்டு போயியிருக்கிறார் ரோகித் சர்மா.
வெறும் 5 பால்களில் அவுட்
இதேபோல் 2ம் இடத்தில் மாற்றி இறங்கிய கே.எல்.ராகுலும் இன்று 24 ரன்னில் வெளியேறி விட்டார். ''எப்படியும் 10 ரன்களுக்கு மேல் அடிக்காத ரோகித் சர்மா, மிடில் வரிசையிலேயே பேட்டிங் செய்திருக்கலாம். ஆனால் தேவையில்லாமல் ஓப்பனிங் இறங்கி அவரும் அடிக்காமல், கே.எல்.ராகுலின் பார்மையும் கெடுத்து விட்டார்'' என்று ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ரோகித் சர்மா இந்த தொடர் மட்டுமல்ல, கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார். கடைசி 14 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் வெறும் 152 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். பெரும்பாலான இன்னிங்ஸ்களில் 20 ரன்கள் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அதுவும் 4வது டெஸ்ட்டில் வெறும் 5 பால்களை மட்டுமே சந்தித்து அவுட் ஆன ரோகித் சர்மாவால், சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் 20 பந்துகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
ரசிகர்களின் கோரிக்கை இதுதான்
பேட்டிங் செய்வதற்காக களத்துக்கு வருவதும், ஏதோ அவசர வேலைக்கு செல்வது போல் முதல் 20 பந்துகளில் அவுட்டாகி விட்டு பெவிலியனுக்கு திரும்புவதுமாக ரோகித் இருக்கிறார். அதுவும் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் ரோகித் சர்மா விக்கெட்டை சொல்லி வைத்து எடுத்து வருகிறார். அதாவது 13 இன்னிங்ஸ்களில் 7 முறை கம்மின்ஸ் பந்தில் அவுட்டாகி ரோகித் சர்மா மோசமான சாதனையை படைத்துள்ளார்.
ரோகித்தின் மோசமான் பார்ம் இந்த தொடரில் இந்த அணியின் பேட்டிங் வரிசையையே சீர்குலைத்துள்ளது. ஆகவே ரோகித் சர்மா தவறுகளை திருத்திக் கொண்டு கேப்டன் என்ற பொறுப்புடன் விளையாட வேண்டும். இல்லாவிடில் டி20 போட்டிகளை போன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.