Sri Lanka vs Afghanistan: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்; சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுமா ஆப்கானிஸ்தான்?
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2ஆவது போட்டியில் இலங்கையும் மோதின. 3ஆவது போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டது. 4ஆவது போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.
நேற்று நடந்த இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டியும் ரத்து செய்யப்பட இருந்தது. கடைசியாக டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 23 ஓவர்களாக குறைக்கப்பட்டு 145 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக விளையாடி 20.1 ஓவர்களில் விக்கெட் விழப்பின்றி 147 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். அதோடு, சூப்பர் 4 சுற்றுக்கும் தகுதி பெற்றது. ஆனால், நேபாள் அணியானது தொடரிலிருந்து வெளியேறியது.
World Cup 2023 India Squad: உலகக் கோப்பை 2023 கிரிக்கெட்டுக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!
இந்த நிலையில், இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணியானது சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். லாகூர் மைதானத்தில் நடக்கும் கடைசி லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆப்கானிஸ்தான் அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இலங்கை:
பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனாகா (கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ஹேமந்த் ரஜிதா, மத்தீஷா பதிரனா
ஆப்கானிஸ்தான்:
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரன், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கேப்டன்), நஜிபுல்லா ஜத்ரன், முகமது நபி, குல்பதின் நைப், கரீம் ஜனத், ரஷீத் கான், ஃபசல்ஹக் பாரூக்கி, முஜீப் உர் ரஹ்மான்
இன்றைய போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். ஆனால், ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் சமநிலையில் இருக்கும். இதையடுத்து ரன் ரேட் அடிப்படையில் இரு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
ரன் ரேட் அடிப்படையில் பார்த்தால் இலங்கை +0.951 ரன் ரேட் பெற்றிருக்கிறது. வங்கதேச அணி +0.373 என்ற ரன் ரேட்டும், ஆப்கானிஸ்தான் ஆனது -1.780 என்ற ரன் ரேட்டும் பெற்றுள்ளன. ஆதலால், ஆப்கானிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், அதிக ரன்கள் வித்தியாசத்தில் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும். ஒரு வேளை சேஸிங் செய்கிறது என்றால், குறைந்த ஓவர்களில் இலக்கை எட்ட வேண்டிய கட்டாயத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது.
இரு அணிகளும் ஒரு நாள் போட்டிகளில் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 6 முறை இலங்கையும், 3 முறை ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.