IND vs NEP: தார்பாய் கொண்டு வந்து திரும்ப கொண்டு சென்ற ஊழியர்கள்; நடுவரது செயலால் குஷியான ஹர்திக் பாண்டியா!
நேபாள் அணிக்கு எதிரான போட்டியின் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா நடுவரை கட்டியணைத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 30 ஆம் தேதி முதல் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில், பாகிஸ்தான் 3 புள்ளிகள் பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இலங்கையில் நடக்கும் போட்டியின் போது மழை பெய்து வருவதால், அங்கு போட்டிகள் நடத்தப்படுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால், சூப்பர் 4 சுற்று போட்டிகளை மாற்றியமைப்பதற்கான ஆலோசனையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இறங்கியுள்ளது.
Gautam Gambhir: நடுவிரலை காட்டியது ஏன்? கௌதம் காம்பீர் விளக்கம்!
ஏற்கனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது கைவிடப்பட்டது. இந்த நிலையில், இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டியானது நேற்று பல்லேகலே மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய நேபாள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தப் போட்டியின் போது மழை விட்டு விட்டு பெய்தது. போட்டியின் 30ஆவது ஓவரின் போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து நடுவர்கள் மைதானத்தை மூடுமாறு மைதான ஊழியர்களை அழைத்தனர். அவர்களும் தார்பாய் கொண்டு வந்தனர். வீரர்களும் நடையை கட்டினர். ஆனால், அதற்குள்ளாக மழை நின்றது.
இதே போன்று 35ஆவது ஓவரிலும் நடந்தது. இதனால், செம குஷியான ஹர்திக் பாண்டியா நடுவரை கலாய்க்கும் விதமாக அவர் முன்பு நின்று சிரித்தார். மேலும் அவரை கட்டிப்பிடித்தார். ஹர்திக் பாண்டியாவின் செயலால் வேதனை அடைந்த நடுவர் நான் என்ன செய்வேன், பாதுகாப்பிற்காக தார்பாய் கொண்டு வர சொன்னேன். ஆனால், அதற்குள்ளாக மழை நின்றுவிட்டது. நான் என்ன செய்வேன்? என்று கேட்பது போன்று பாவணை செய்துள்ளார்.
நேபாள் அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானதைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் ஆடியது. ஆனால், அப்போது மழை குறுக்கிட்டது. கிட்டத்தட்ட 2 மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்த நிலையில், போட்டியானது 23 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டு 145 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஆடிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக விளையாடி 20.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 147 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இதன் மூலமாக சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா முன்னேறியது. ஆனால், சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 10 ஆம் தேதி நடக்க இருக்கிறது.