IND vs NEP:இந்திய வீரர்கள் மீதான கோபத்தை நேபாள் பந்து வீச்சாளர்கள் மீது காட்டி ருத்ரதாண்டவம் ஆடிய ரோகித் சர்மா
நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 5ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி, நேபாள் அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதில், தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் அசால்ட்டாக விளையாடினர். நேபாள் வீரர்கள் கொடுத்த எளிதான கேட்சுகளை கோட்டை விட்டனர்.
முதலில் ஸ்லிப்பில் நின்றிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் கோட்டைவிட்டார். அதன் பிறகு ஆஃப் ஷைடு திசையில் நின்றிருந்த விராட் கோலி, இதையடுத்து விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் என்று ஒவ்வொருவரும் எளிதான கேட்சுகளை எல்லாம் கோட்டைவிட்டனர். மேலும், பீல்டிங்கிலும் ஷர்துல் தாக்கூர் பவுண்டரியை தடுக்க சென்று கோட்டைவிட்டார். ஓவர் த்ரோ மூலமாக எக்ஸ்ட்ரா ரன்களும் கொடுக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ரோகித் சர்மா வீரர்கள் மீது எந்த கோபத்தையும் காட்டாமல் வைத்திருந்து, நேபாள் பந்து வீச்சாளர்கள் மீது தனது ஒட்டுமொத்த கோபத்தையும் காட்டியுள்ளார்.
முதலில் ஆடிய நேபாள் அணி 230 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் இந்திய அணி விளையாடியது. இதில், 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்த நிலையில், போட்டியானது 23 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. அதோடு, 145 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 59 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று சுப்மன் கில்லும் 62 பந்துகளில் ஒரு சிக்ஸர் 8 பவுண்டரி உள்பட 67 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்தியா 20.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 147 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Gautam Gambhir: நடுவிரலை காட்டியது ஏன்? கௌதம் காம்பீர் விளக்கம்!
அதோடு, சூப்பர் 4 சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. வரும் 10 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றுப் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியானது கொழும்பு மைதானத்தில் நடக்க இருக்கிறது. ஆனால், கொழும்புவில் மழை எதிரொளி இருப்பதால் சூப்பர் 4 சுற்று போட்டிகள் வேற மைதானத்திற்கு மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளது.