கோலி மாதிரி எத்தனை பேர் வந்தாலும் சச்சின் டெண்டுல்கரை நெருங்கக்கூட முடியாது..! சக்லைன் முஷ்டாக் கருத்து
சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை எந்தவொரு பேட்ஸ்மேனாலும் நெருங்கக்கூட முடியாது என்று சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலி, போட்டிக்கு போட்டி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 75 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள்(100 சதங்கள்), அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வரிசையில் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்கிறார் கோலி. சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படும் கோலி, அவரை போலவே ரன்களை குவித்துவருகிறார்.
சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் விராட் கோலி. வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிட முடியாது; ஒப்பிடவும் கூடாது. அது சரியாக இருக்காது.
ஆனால் சச்சின் டெண்டுல்கருடன் கோலியை ஒப்பிடுவதே பரவாயில்லை எனுமளவிற்கு, மற்றொரு விவாதமும் கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. அது என்னவென்றால் இருவரில் யார் சிறந்தவர் என்பதுதான். இந்த கேள்வியை எழுப்புவதே தவறு. ஏனென்றால் வாசிம் அக்ரம், மெக்ராத், வால்ஷ், ஆம்ப்ரூஸ், முரளிதரன், ஷேன் வார்னே, வக்கார் யூனிஸ், சமிந்தா வாஸ், அக்தர், பிரெட் லீ போன்ற மிகச்சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு ஆடியவர் சச்சின் டெண்டுல்கர். எனவே கோலி சிறந்த வீரராக இருந்தாலும் அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடுவது தவறு.
இதைத்தான் சக்லைன் முஷ்டாக்கும் கூறியுள்ளார். சச்சின் - கோலி ஒப்பீடு குறித்து பேசிய சக்லைன் முஷ்டாக், என்னை பொறுத்தமட்டில் அல்ல; உலகமே ஒப்புக்கொள்ளும் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான். எந்தவிதமான ஷாட்டாக இருந்தாலும், சச்சின் ஆடியதுதான் எடுத்துக்காட்டாக திகழும். இன்றைய காலக்கட்டத்தின் தலைசிறந்த வீரர் விராட் கோலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சச்சினுடன் ஒப்பிட முடியாது. சச்சின் டெண்டுல்கர் அவரது காலத்தில் எதிர்கொண்ட பவுலர்கள் எல்லாம் மிகச்சிறந்தவர்கள். கோலி வாசிம் அக்ரமை எதிர்கொண்டிருக்கிறாரா..? வால்ஷ், ஆம்ப்ரூஸ், மெக்ராத், ஷேன் வார்ன், முரளிதரன் ஆகியோரை எதிர்கொண்டிருக்கிறாரா? இல்லை.. அவர்கள் எல்லாம் மிகவும் புத்திக்கூர்மையான பவுலர்கள். பேட்ஸ்மேன்களை வலையில் சிக்கவைக்கும் வித்தையறிந்தவர்கள். அதனால் விராட் கோலியை சச்சினுடன் எல்லாம் ஒப்பிடவே கூடாது என்று சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.