- Home
- Sports
- Sports Cricket
- ஃபின் ஆலன் சூறாவளியில் சிக்கிய SA.. 33 பந்துகளில் சதம் விளாசி சாதனை.. கெத்தாக பைனலில் நியூசிலாந்து!
ஃபின் ஆலன் சூறாவளியில் சிக்கிய SA.. 33 பந்துகளில் சதம் விளாசி சாதனை.. கெத்தாக பைனலில் நியூசிலாந்து!
டி20 உலகக்கோப்பை 2026 அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை பந்தாடி பைனலுக்கு சென்றுள்ளது. நியூசிலாந்து வீரர் பின் ஆலன் வெறும் 33 பந்துகளில் சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்தார்.

பின் ஆலன் 33 பந்துகளில் சதம்; பைனலில் நியூசிலாந்து
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடந்த டி20 உலகக்கோப்பை 2026 அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்த நியூசிலாந்து அணி கெத்தாக பைனலுக்கு சென்றுள்ளது.
கொல்கத்தாவில் சூறாவளியாக சுழன்றடித்து பவுண்டரி, சிக்சர் மழை பொழிந்த பின் ஆலன் வெறும் 33 பந்துகளில் சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்தார். இந்த தொடரில் தோல்வியே அடையாமல் கெத்தாக வலம் வந்த தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதியில் மிக மோசமான தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.
தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்
முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்து அணியின் சூப்பரான பந்துவீச்சால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. மார்கோ யான்சன் 30 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார். டெவால்ட் பிரெவிஸ் 34 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் எய்டன் மார்க்ரம் (18), குயின்டன் டி காக் (10), டேவிட் மில்லர் (6) சொதப்பினார்கள். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி, ரச்சின் ரவீந்திரா, கோல் மெக்கோன்சி தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.
நியூசிலாந்து அதிரடி தொடக்கம்
பின்பு சவாலான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி வெறும் 12.1 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 173 ரன்கள் எடுத்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது. ஃபின் ஆலனும், டிம் சைபர்ட்டும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி ருத்ரதாண்டவமாடினார்கள். தென்னாப்பிரிக்காவின் பாஸ்ட் பவுலர்கள், ஸ்பின் பவுலர்கள் என அனைவரையும் மிரள விட்டனர். டிம் சைபர்ட் 33 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
ஃபின் ஆலன் வரலாற்று சாதனை
மறுமுனையில் ருத்ரதாண்டமாடிய ஃபின் ஆலன் வெறும் 19 பந்துகளில் அரைசதம் கடந்து டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்தார். அதாவது 33 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென்னாப்பிரிக்கா பவுலர்களை கதற விட்ட அவர் 10 பவுண்டரி, 8 சிக்சர்கள் நொறுக்கினார். டி20 உலகக்கோப்பையில் ஒரு வீரரின் அதிவேக சதம் இதுதான். தனி ஆளாக நியூசிலாந்தை பைனல் கொண்டு சென்ற அவர் ஆட்டநாயகன் விருது வென்றார்.
