- Home
- Sports
- Sports Cricket
- New Zealand vs India: பொறுமையை சோதித்த பிளண்டெல்... பொட்லம் பண்ணிய இந்தியா... முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து ஆல் அவுட்
New Zealand vs India: பொறுமையை சோதித்த பிளண்டெல்... பொட்லம் பண்ணிய இந்தியா... முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து ஆல் அவுட்
NZ vs IND 2nd Test : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 356 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்தியா பேட்டிங் ஆடி வருகிறது.

NZ vs IND 2nd Test
246/5 என்ற ஸ்கோர் உடன் இன்று ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அன்ஷுல் கம்போஜ் தன்னுடைய முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தினார். கிளென் பிலிப்ஸை 36 ரன்களுக்கு அவர் வெளியேற்றினார். பிலிப்ஸ் மற்றும் பிளண்டெல் இணைந்து 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். முதல் நாள் மிடில் ஆர்டர் சரிவில் இருந்து மீள இது உதவியது. 53 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கிய பிளண்டெல், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விக்கெட் கீப்பர்-பேட்டரான அவர், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பொறுமையுடன் விளையாடினார்.
நிலைத்து நின்று ஆடிய பிளண்டெல்
மறுமுனையில் நாதன் ஸ்மித் சிறப்பான ஆதரவை வழங்கினார். நியூசிலாந்தின் ஸ்கோரை உயர்த்தவும், இந்திய பந்துவீச்சாளர்களை சோர்வடையச் செய்யவும் இந்த ஜோடி உறுதியாக இருந்தது. ஸ்மித் சில பவுண்டரிகளையும் அடித்தார். இருப்பினும், ஆகாஷ் தீப் இந்த பார்ட்னர்ஷிப்பை முறித்தார். அவரது பந்துவீச்சில் ஸ்மித் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் 45 பந்துகளில் 4 பவுண்டரிகளை அடித்திருந்தார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய ஆகாஷ் தீப், கைல் ஜேமிசனை 19 ரன்களுக்கு வீழ்த்தி தனது நான்காவது விக்கெட்டை பதிவு செய்தார்.
சதத்தை நழுவவிட்ட பிளண்டெல்
காலை செஷனில் மூன்று விக்கெட்டுகளை இழந்த போதிலும், நியூசிலாந்து அணி 84 ரன்களை சேர்த்து 300 ரன்களை கடந்தது. மதிய உணவு இடைவேளையில், 109 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 330/8 என்ற நிலையில் இருந்தது. நியூசிலாந்து பேட்டிங் தடுமாற்றங்களுக்கு மத்தியில் டாம் பிளண்டெல் நிலைத்து நின்று, ஆடினார். காலை செஷனில் இந்தியா மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், பிளண்டெலின் சிறப்பான ஆட்டம் நியூசிலாந்து அணிக்கு கை கொடுத்தது. உணவு இடைவெளிக்கு பின் ஆட்டம் தொடங்கியதும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிளண்டெல் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து ஆல் அவுட்
இதையடுத்து அடித்து ஆடத்தொடங்கிய மேட் ஹென்ரி தன் பங்கிற்கு ஆகாஷ் தீப் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார். இருப்பினும் அடுத்த பந்திலேயே விக்கெட் கீப்பர் பண்ட் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் மேட் ஹென்ரி. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் 356 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது நியூசிலாந்து. இந்திய பந்துவீச்சில் சிறப்பாக பவுலிங் செய்த ஆகாஷ் தீப், ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அன்ஷுல் கம்போஜ், குர்நூர் பிரார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. இந்த இன்னிங்ஸில் 26 ஓவர்களை வீசிய பும்ராவுக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.
இதன்பின்னர் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால், முதல் ஓவரிலேயே மேட் ஹென்ரி பந்தில் கிளீன் போல்டு ஆனார். இதனால் ரன் ஏதுமின்றி முதல் விக்கெட்டை பறிகொடுத்தது இந்தியா.












