நான் அங்கே இருந்து ஓடி வர்றேன்.. அவன் ஈசியா விலகிடுறான்.! அம்பயரிடம் கத்திய ஹர்திக் பாண்டியா.. வைரல் வீடியோ
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் சைட் ஸ்க்ரீன்(Sight Screen) பிரச்னையால் மிட்செல் மார்ஷ் திடீரென விலகியதால், பந்துவீச ஓடிவந்த ஹர்திக் பாண்டியா செம கடுப்பாகி அம்பயரிடம் கோபமாக கத்திய வீடியோ வைரலாகிவருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடேவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா ஆடாததால் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி செய்கிறார்.
இந்திய அணி:
ஷுப்மன் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலிய அணி:
டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஷேன், ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சீன் அபாட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.
முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டை 5 ரன்களுக்கு 2வது ஓவரிலேயே வீழ்த்தினார் முகமது சிராஜ். அதன்பின்னர் மிட்செல் மார்ஷும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடினர். ஸ்மித் 22 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து சதத்தை நோக்கி ஆடிய மிட்செல் மார்ஷ் 81 ரன்களுக்கு ஜடேஜாவின் சுழலில் வீழ்ந்தார். இதையடுத்து மார்னஸ் லபுஷேனும் ஜோஷ் இங்லிஸும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் 6வது ஓவரில் முகமது சிராஜ் பந்துவீசியபோது சைட் ஸ்க்ரீன் பிரச்னையால், சிராஜ் ஓடிவந்து முடித்து பந்துவீசப்போகும்போது ஸ்டீவ் ஸ்மித் விலகினார். கிரிக்கெட்டில் பொதுவாக சைட் ஸ்க்ரீன் பிரச்னை ஃபாஸ்ட் பவுலர்களைத்தான் கடுங்கோபத்திற்குள்ளாக்கும். ஏனெனில் சைட் ஸ்க்ரீன் பகுதியில் பார்வையாளர்களோ வேறு யாரோ நடந்து சென்றால் அது பேட்ஸ்மேன்களுக்கு இடையூறாக இருக்கும். அதனால் அவர்கள் பேட்டிங் ஆடாமல் விலகிவிடுவார்கள்.
பீஸ்ட் மோடில் உள்ள விராட் கோலி எத்தனை சதங்கள் அடிப்பார்..? ஷோயப் அக்தரின் முரட்டு கணிப்பு
ஸ்பின்னர்கள் பந்துவீசும்போது பேட்ஸ்மேன்கள் நகர்ந்தால் பிரச்னையில்லை. ஆனால் ஃபாஸ்ட் பவுலர்கள் 30 யார்டு வட்டத்திற்கு வெளியே இருந்து ஓடிவந்து பந்துவீசப்போகும்போது பேட்ஸ்மேன் நிறுத்தினால் பவுலரின் ரிதம் பாதிக்கப்படும். அந்தவகையில், சிராஜ் பந்துவீசியபோது ஸ்மித் விலகினார். அதன்பின்னர் ஹர்திக் பாண்டியா பந்துவீச ஓடிவந்த நிலையில், பந்துவீசுவதற்கு முன்பாக மிட்செல் மார்ஷ் விலகினார். அதனால் செம கடுப்படைந்த ஹர்திக் பாண்டியா, அம்பயரிடம் கோபமாக பேசிவிட்டுச்சென்றார். அவர் சைட் ஸ்க்ரீன் பகுதியில் நடந்துசெல்பவர்களை திட்டினாரா அல்லது மிட்செல் மார்ஷை திட்டினாரா என்று தெரியவில்லை. மிட்செல் மார்ஷை திட்டியதாக தெரியவில்லை. சைட் ஸ்க்ரீன் பகுதியில் கையை நீட்டித்தான் திட்டிவிட்டுச்சென்றார். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.