கவாஸ்கர் சொன்னது தவறு.. ராகுல்லாம் வேலைக்கு ஆகமாட்டார்.. ICC WTC ஃபைனலில் அந்த பையன் தான் ஆடுவான்- சபா கரிம்
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் தான் ஆடுவார் என்று முன்னாள் வீரர் சபா கரிம் கருத்து கூறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் சீசன் ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி, 2021-2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அடுத்தடுத்து 2 முறை ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறின. வரும் ஜூன் 7ம் தேதி லண்டன் லார்ட்ஸில் ஃபைனல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.
ஃபைனலுக்கு முன் கடைசியாக அண்மையில் ஆடிய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற அதே உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் இந்திய அணி ஃபைனலில் ஆடினாலும், பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய 2 மிகப்பெரிய வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடமாட்டார்கள். அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.
IPL 2023: தளபதி பாடலுக்கு கிடார் வாசித்த தல தோனி..! சிஎஸ்கே கேம்ப்பில் செம கச்சேரி.. வைரல் வீடியோ
விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், பேட்டிங்கில் பின்வரிசையில் வலுசேர்ப்பவர். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி 10-15 ஓவர்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். அவர் ஆடாதது மிடில் ஆர்டரில் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேஎஸ் பரத் விக்கெட் கீப்பராக ஆடினார். பேட்டிங்கில் சொதப்பிய பரத், விக்கெட் கீப்பிங்கிலும் தவறுகளை செய்தார். மிகச்சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தார் என்று சொல்லுமளவிற்கு செய்யவில்லை.
இந்திய அணியின் தொடக்க வீரராக ஆடிய ராகுல் சொதப்பியதால், கடைசி 2 போட்டிகளில் ஷுப்மன் கில் தொடக்க வீரராக ஆடினார். இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அவர்கள் இருவரையுமே ஆடவைத்துவிட்டு, கேஎஸ் பரத்தை அணியிலிருந்து நீக்கிவிடலாம் என்று கவாஸ்கர் கூறியிருந்தார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நடக்கும் லண்டன் ஓவலில் கடந்த ஆண்டு நடந்த டெஸ்ட்டில் ராகுல் அபாரமாக ஆடி சதமடித்தார். எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ராகுலே விக்கெட் கீப்பராக ஆடலாம். அவர் விக்கெட் கீப்பராக ஆடுவது மிடில் ஆர்டருக்கு வலுசேர்ப்பதுடன், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரையும் வலுப்படுத்தும் என்று கவாஸ்கர் கூறியிருந்தார்.
ஆனால் கவாஸ்கரின் கருத்துடன் முரண்பட்டுள்ளார் முன்னாள் வீரர் சபா கரிம். இளம் வீரர்கள் சரியாக ஆடாவிட்டாலும், அவர்கள் மீது நம்பிக்கை வைத்து உடனடியாக தூக்கியெறியாமல் இந்திய அணி நிர்வாகம் தொடர் வாய்ப்பளித்துவருவதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் கேஎஸ் பரத் தான் விக்கெட் கீப்பராக ஆடுவார் என்று சபா கரிம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சபா கரிம், இந்திய அணி நிர்வாகம் தான் வீரர்கள் தேர்வில் இறுதி முடிவை எடுக்கும். ஆனால் இந்திய அணி நிர்வாகம் இளம் வீரர்கள் சரியாக ஆடவில்லை என்றால் உடனடியாக தூக்கியெறியாமல் அவர்களுக்கு தொடர் வாய்ப்பளித்து, அணியில் அவர்களுக்கான இடத்திற்கான உறுதியை அளித்து அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து வளர்வதற்கு உதவுகிறது.
இந்திய அணி நிர்வாகம் அவ்வளவு எளிதாக எந்த இளம் வீரரையும் அணியிலிருந்து நீக்குவதில்லை. எனவே கேஎஸ் பரத்துக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படும். இங்கிலாந்து கண்டிஷனில் விக்கெட் கீப்பிங் செய்வது கேஎஸ் பரத் மாதிரியான இளம் விக்கெட் கீப்பருக்கு கண்டிப்பாக பெரும் சவாலாக இருக்கும். ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அவர் தான் விக்கெட் கீப்பராக ஆடுவார் என்று சபா கரிம் தெரிவித்துள்ளார்.