- Home
- Sports
- Sports Cricket
- பாகிஸ்தான் வீரரை வாங்கிய காவ்யா மாறன்.. விதிகளை மீறினாரா? மவுனம் கலைத்த பிசிசிஐ!
பாகிஸ்தான் வீரரை வாங்கிய காவ்யா மாறன்.. விதிகளை மீறினாரா? மவுனம் கலைத்த பிசிசிஐ!
BCCI Clarifies on Kavya Maran Buying Pakistan Abrar Ahmed: நமது ராணுவத்தை கேலி செய்த பாகிஸ்தான் வீரரை அணியில் எடுப்பதா? என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் காவ்யா மாறனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

பாகிஸ்தான் வீரரை வாங்கிய காவ்யா மாறன்
இங்கிலாந்தில் நடக்கும் 'தி ஹன்ட்ரெட்' கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் நடந்த 'தி ஹன்ட்ரெட்' தொடரின் முதல் ஏலத்தில், லெக்-ஸ்பின்னர் அப்ரார் அகமதுவை காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி £190,000 (இந்திய மதிப்பில் சுமார் 2.1 கோடி ரூபாய்) கொடுத்து வாங்கியது.
காவ்யா மாறனுக்கு எதிர்ப்பு
இதன் மூலம், ஒரு இந்திய நிறுவனம் நடத்தும் வெளிநாட்டு லீக் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் பாகிஸ்தான் வீரர் என்ற நிலையை அப்ரார் பெற்றுள்ளார். இந்த ஒப்பந்தம் வெளியானதில் இருந்து, சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் இணை உரிமையாளரான காவ்யா மாறனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் நடந்த 'ஆபரேஷன் சிந்தூர்' சம்பவத்தின்போது, 27 வயதான அப்ரார் அகமது இந்திய விமானப்படை மற்றும் ராணுவத்தைக் கேலி செய்து பதிவிட்டார்.
நமது ராணுவத்தை கேலி செய்த பாகிஸ்தான் வீரர்
நமது ராணுவத்தை கேலி செய்த பாகிஸ்தான் வீரரை அணியில் எடுப்பதா? என ரசிகர்கள் காவ்யா மாறனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் SA20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய அணிகளை வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் நிர்வாகம், இதற்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த ஒரு வீரரையும் ஒப்பந்தம் செய்ததில்லை. லீட்ஸை மையமாகக் கொண்ட இந்த அணி, டிரென்ட் ராக்கெட்ஸ் அணியுடன் போட்டி போட்டு அப்ராரை ஏலத்தில் எடுத்தது பெரும் ஆச்சரியத்தையும், அதே சமயம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
பிசிசிஐ விளக்கம்
இந்த நிலையில், இது ஒரு வெளிநாட்டு லீக் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இதில் பிசிசிஐ தலையிட முடியாது என்றும், சம்பந்தப்பட்ட அணி நிர்வாகம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய ராஜீவ் சுக்லா, ''இது எங்கள் கட்டுப்பாட்டில் (ஐபிஎல்) இல்லை. அவர்கள் ஒரு வெளிநாட்டு லீக்கிற்காக இதைச் செய்துள்ளனர். இதில் அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்; நாங்கள் எதுவும் செய்ய முடியாது'' என்று தெரிவித்தார்.
'தி ஹன்ட்ரெட்' தொடரில் உள்ள மேலும் மூன்று அணிகளின் பங்குகளையும் ஐபிஎல் அணிகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் வாங்கியுள்ளனர். ஐபிஎல் முதலீட்டாளர்கள் நடத்தும் நான்கு அணிகளும் பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்குமா என்ற கேள்வி இந்த ஏலத்திற்கு முன்பே எழுந்தது. ஆனால், பாகுபாடற்ற ஏலம் நடத்தப்படும் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் முன்பே தெரிவித்திருந்தது.

