- Home
- Sports
- Sports Cricket
- ப்பா.. என்னா அடி.. ரோகித், கோலி சாதனையை தூள் தூளாக்கிய ஃபின் ஆலன்.. வரலாற்று சாதனை!
ப்பா.. என்னா அடி.. ரோகித், கோலி சாதனையை தூள் தூளாக்கிய ஃபின் ஆலன்.. வரலாற்று சாதனை!
ஃபின் ஆலன் வெறும் 33 பந்துகளில் சதம் விளாசி டி20 உலகக்கோப்பையில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். 100 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 10 பவுண்டரி, 8 சிக்சர்கள் விளாசினார்.

நியூசிலாந்து அணி பைனல் சென்றது
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடந்த டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்குள் சென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்பு விளையாடிய நியூசிலாந்து அணி வெறும் 12.1 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 173 ரன்கள் எடுத்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
ஃபின் ஆலன் மின்னல் வேக சதம்
டிம் சைபர்ட் 33 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்தார். மற்றொரு அதிரடி வீரர் ஃபின் ஆலன் வெறும் 33 பந்துகளில் சதம் விளாசி டி20 உலகக்கோப்பையில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். 33 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 10 பவுண்டரி, 8 சிக்சர்கள் விளாசினார்.
ரோகித் சர்மா சாதனை முறியடிப்பு
இந்திய வீரர் ஹிட்மேன் ரோகித் சர்மா 2017ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 35 பந்துகளில் சதம் விளாசி இருந்தார். அதே ஆண்டில் தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் 35 பந்துகளில் சதம் நொறுக்கி இருந்தார். இந்த இரண்டு சாதனைகளையும் இன்று ஃபின் ஆலன் தூள் தூளாக நொறுக்கியுள்ளார். இதுமட்டுமின்றி இந்த போட்டியில் அவர் பல்வேறு சாதனைகளையும் முறியடித்துள்ளார்.
விராட் கோலி சாதனையும் காலி
டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் சதம் விளாசிய வீரர், அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் ஃபின் ஆலன் படைத்துள்ளார். 2009 அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் எடுத்த தில்ஷன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். விராட் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார். 2016 அரையிறுதியில் மும்பையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கோலி ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் எடுத்திருந்தார்.
கேன் வில்லியம்சன்
2022 உலகக்கோப்பை அரையிறுதியில் அடிலெய்டில் இந்தியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்த இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் நான்காவது இடத்தில் உள்ளார். 2016 அரையிறுதியில் கொல்கத்தாவில் இங்கிலாந்துக்கு எதிராக 85 ரன்கள் எடுத்த மார்லன் சாமுவேல்ஸ் அடுத்த இடத்தில் உள்ளார். 2021 இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 85 ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

