நீங்க ஒருநாள் கிரிக்கெட்டில் தான் 500 விக்கெட் வீழ்த்தியிருக்கீங்க..! வாசிம் அக்ரமுக்கு சல்மான் பட் பதிலடி
ஒருநாள் கிரிக்கெட் குறித்து பாகிஸ்தான் முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் வாசிம் அக்ரம் கூறிய கருத்து குறித்து பேசியுள்ளார் சல்மான் பட்.
சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் தான் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. டி20 கிரிக்கெட் 15 ஆண்டுகளுக்கு முன் தான் அறிமுகமானது. ஆனாலும் டி20 கிரிக்கெட்டில் உலகளவில் பல்வேறு லீக் தொடர்கள் நடத்தப்படுவதாலும், அதிகமான பணம் புழங்குவதாலும் அதில் ஆடத்தான் வீரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும், டி20 கிரிக்கெட் போட்டிகள் அதிகபட்சம் 4 மணி நேரத்தில் முடிந்துவிடுவதால் ரசிகர்களும் டி20 கிரிக்கெட்டை பார்க்கத்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். ஒருநாள் கிரிக்கெட்டுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஆனாலும் ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து ஒருநாள் கிரிக்கெட்டை பார்க்க ரசிகர்கள் முன்புபோல் ஆர்வம் காட்டுவதில்லை.
இதையும் படிங்க - Axar Patel Record: தோனி, யூசுஃப் பதானின் நீண்டகால சாதனையை தகர்த்த அக்ஸர் படேல்..!
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 ஃபார்மட்டுகளிலும் வீரர்கள் ஆடுவதால் பணிச்சுமை அதிகமாகி சோர்வடைகின்றனர். அதனால் தான், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆட ஏதுவாக ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.
இதையடுத்து ஒருநாள் கிரிக்கெட் குறித்து பேசிய வாசிம் அக்ரம், ஒருநாள் கிரிக்கெட்டுக்கு இப்போதைய காலக்கட்டத்தில் இங்கிலாந்தில் வேண்டுமானால் கூட்டம் கூடலாம். ஆனால் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய ஆசிய நாடுகளில் ஒருநாள் கிரிக்கெட்டை காண ஸ்டேடியம் நிரம்பாது. ஒருநாள் கிரிக்கெட் அழிந்துகொண்டிருக்கிறது என்றார் வாசிம் அக்ரம். ஒருநாள் கிரிக்கெட்டே ஒருகட்டத்தில் கைவிடப்படலாம் என்று அக்ரம் கூறியிருந்தார்.
இந்நிலையில், அக்ரமின் கருத்து குறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட், பிளேயர்ஸ் அவர்கள் விரும்பும் ஃபார்மட்டை தேர்வுசெய்துகொள்ளலாம். ஒருநாள் கிரிக்கெட்டில் லீக் போட்டிகள் நடத்தப்படுவதில்லை. டி20 கிரிக்கெட்டில் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதனால் அதிக பணம் புழங்குகிறது. அதனால் தான் டி20 கிரிக்கெட்டில் ஆட ஆர்வம் காட்டும் வீரர்கள், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுகின்றனர்.
ஒருநாள் போட்டிகள் கிரிக்கெட்டின் முக்கியமான தூண். ஒருநாள் கிரிக்கெட் தொடர்ந்து ஆடப்படவேண்டும். ஒருநாள் கிரிக்கெட்டில் ஏகப்பட்ட சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஒருகட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே உலக கோப்பை மூலம் உலக சாம்பியன் தீர்மானிக்கப்பட்டது.
இதையும் படிங்க - என்னை பொறுத்தமட்டில் அவன் ஆல்ரவுண்டரே கிடையாது..! இந்திய வீரரை துச்சமாக மதிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ்
வாசிம் அக்ரம் மிகப்பெரிய லெஜண்ட். அவரது மற்ற அனைத்து கருத்துகளின் மீதும் எனக்கு மரியாதை இருக்கிறது. வாசிம் அக்ரம் மாதிரியான லெஜண்டுக்கு ஏதேனும் சொல்லுமளவிற்கு நாம் பெரிய ஆள் இல்லை. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் தான் அவர் 500 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பதை மறந்துவிடக்கூடாது என்று சல்மான் பட் கூறினார்.