Axar Patel Record: தோனி, யூசுஃப் பதானின் நீண்டகால சாதனையை தகர்த்த அக்ஸர் படேல்..!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி இந்தியாவிற்கு வெற்றியை தேடிக்கொடுத்த அக்ஸர் படேல், தோனி மற்றும் யூசுஃப் பதானின் பல ஆண்டுகால சாதனையை தகர்த்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், டிரினிடாட்டில் நேற்று 2வது ஒருநாள் போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 23 பந்தில் 39 ரன்கள் அடித்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷேய் ஹோப் அபாரமாக ஆடி சதமடித்து 115 ரன்களை குவித்தார். நிகோலஸ் பூரன் 77 பந்தில் 74 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 311 ரன்களை குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இதையும் படிங்க - என்னை பொறுத்தமட்டில் அவன் ஆல்ரவுண்டரே கிடையாது..! இந்திய வீரரை துச்சமாக மதிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ்
312 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்(64) மற்றும் சஞ்சு சாம்சன் (54) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தாலும், அவர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால், மற்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால் 39 ஓவரில் 205 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், அக்ஸர் படேல் களத்திற்கு வந்தார்.
அக்ஸர் படேல் களத்திற்கு வரும்வரை ஆட்டம் வெஸ்ட் இண்டீஸுக்கு சாதகமாகவே இருந்தது. அதன்பின்னர் அடி வெளுத்து வாங்கிய அக்ஸர் படேல் 27 பந்தில் அரைசதம் அடித்தார். 35 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 64 ரன்களை குவித்து சிக்ஸர் விளாசி போட்டியை முடித்து கொடுத்தார் அக்ஸர் படேல். அக்ஸர் படேலின் அதிரடியான அரைசதத்தால் கடைசி ஓவரின் 4வது பந்தில் இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என தொடரை வென்றது.
இதையும் படிங்க - அடுத்த ஆண்டு ஹர்திக் பாண்டியா ஓய்வு..? பாண்டியாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய ரவி சாஸ்திரி
இந்த போட்டியில் ஆடிய அபாரமான பேட்டிங்கின் மூலம் தோனி மற்றும் யூசுஃப் பதானின் சாதனையை தகர்த்துள்ளார் அக்ஸர் படேல். இலக்கை வெற்றிகரமாக விரட்டிய ஆட்டத்தில், 7ம் வரிசை/அதற்கு கீழ் களமிறங்கி அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை அக்ஸர் படேல் படைத்துள்ளார். இதற்கு முன், 2005ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக தோனி 7ம் வரிசையில் இறங்கி வெற்றிகரமாக போட்டியை முடித்து கொடுத்தபோது 3 சிக்ஸர்கள் விளாசினார். அதுதான் சாதனையாக இருந்தது. அதே சாதனையை 2011ல் யூசுஃப் பதான் 2 முறை படைத்து தோனியை சமன் செய்தார். இப்போது அக்ஸர் படேல், தோனி மற்றும் யூசுஃப் பதான் ஆகிய இருவரின் சாதனையையும் தகர்த்துள்ளார்.