அடுத்த ஆண்டு ஹர்திக் பாண்டியா ஓய்வு..? பாண்டியாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய ரவி சாஸ்திரி
2023ம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையை வென்றுவிட்டால் ஹர்திக் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவார் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் கபில் தேவுக்கு அடுத்த சிறந்த மற்றும் தரமான ஆல்ரவுண்டராக பார்க்கப்படுபவர் ஹர்திக் பாண்டியா. அதிரடியான பேட்டிங், அருமையான பவுலிங், அபாரமான ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் அணிக்கு பங்களிப்பு செய்யக்கூடியவர்.
இந்திய அணியில் ஆல்ரவுண்டராக தனக்கான நிரந்தர இடத்தை பிடித்துவைத்திருந்த ஹர்திக் பாண்டியா, இடையில் ஒன்றிரண்டு ஆண்டுகள் காயம் காரணமாக இந்திய அணியில் தொடர்ந்து ஆடமுடியாமல் தனக்கான இடத்தை இழந்தார்.
ஆனால் காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதியுடன் ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்திய ஹர்திக் பாண்டியா, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்குடன் நின்றுவிடாமல் கேப்டன்சியிலும் அபாரமாக செயல்பட்டு, அறிமுக சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸுக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.
இதையும் படிங்க - என்னை பொறுத்தமட்டில் அவன் ஆல்ரவுண்டரே கிடையாது..! இந்திய வீரரை துச்சமாக மதிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ்
அதன்விளைவாக மீண்டும் இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்துவிட்ட ஹர்திக் பாண்டியா, இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் அபாரமாக விளையாடினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு இந்திய அணி தொடரை வெல்ல காரணமாக இருந்த ஹர்திக் பாண்டியா, தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
ஒரு ஆல்ரவுண்டர், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான ஃபார்மட்டிலும் ஆடுவது என்பது இன்றைய சூழலில் மிகக்கடினமான விஷயம். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த 3 ஃபார்மட்டிலும் ஆடுவது மட்டுமல்லாது, ஐபிஎல்லிலும் ஆடுவதால் வீரர்கள் மீதான பணிச்சுமை அதிகரிக்கிறது. அதனால் தான், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவும் விரைவில் ஓய்வுபெற்றுவிடுவார் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இதையும் படிங்க - இந்தியாவிற்கு மேட்ச்சை ஜெயித்து கொடுத்த சஞ்சு சாம்சனின் விக்கெட் கீப்பிங்! ஒரே டைவில் ஹீரோவான சாம்சன்.. வீடியோ
இதுகுறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி, டெஸ்ட் கிரிக்கெட் எப்போதுமே இருக்கும். ஏற்கனவே வீரர்கள் தாங்கள் எந்த ஃபார்மட்டில் ஆடவேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியாவை எடுத்துக்கொள்ளுங்கள். டி20 கிரிக்கெட்டில் ஆடவேண்டும் என்பதில் பாண்டியா உறுதியாக இருக்கிறார். வேறு எதிலும் ஆடுவதை பற்றி அவர் கவலைப்படவில்லை.
அடுத்த ஆண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா ஆடுவார். அதன்பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விலகிவிடுவார். மற்ற வீரர்களும் தாங்கள் ஆடவேண்டிய ஃபார்மட்டை அவர்களே தேர்வு செய்துகொண்டு, விரும்பாத ஃபார்மட்டிலிருந்து விலகிவிடுவார்கள். அது அவர்களது உரிமை என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.