கிறிஸ் கெயிலைத் தொடர்ந்து வரலாற்று சாதனை படைத்த ஷோஃபி டிவைன்!
குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி வீராங்கனை ஷோஃபி டிவைன் அதிரடியாக ஆடி 99 ரன்கள் எடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த 4ஆம் தேதி முதல் மகளிர் பிரீமியர் லீக் தொடர் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. 5 அணிகள் இடம் பெற்றுள்ள் மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் நம்பர் ஒன் இடத்திலும், குஜராத் ஜெயின்ட்ஸ் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலும் உள்ளது. முதல் சீசனுக்கான முதல் மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. நேற்று நடந்த போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங் ஆடியது.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை டன்க்லி 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் லாரா 68 ரன்கள் அடித்தார். சபினேனி மேகனா 31 ரன்கள் அடித்தார். ஆஷ்லே கார்ட்னெர் 26 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்வரிசையில் ஹேமலதா 6 பந்தில் 16 ரன்களும், ஹர்லீன் தியோல் 5 பந்தில் 12 ரன்களும் அடிக்க குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில், ஸ்மிரிதி மந்தனா 31 பந்தில் 37 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷோஃபி டிவைன் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய டிவைன் 35 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 99 ரன்களை குவித்த நிலையில், ஒரு ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். தனது அதிரடியான பேட்டிங்கால் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை - ராம் சரண் ஓபன் டாக்!
இதற்கு முன்னதாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஆண்கள் ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் கிறிஸ் கெயில் 66 பந்துகளில் 17 சிக்சர்கள், 13 பவுண்டரிகள் உள்பட 175 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை கெயில் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து ஆர்சிபி அணியில் ஷோஃபி டிவைன் அதிக ரன்கள் (99) குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஷோஃபி டிவைன் 253 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியின் மெக் லேனிங் 239 ரன்கள் எடுத்து 2ஆவது இடத்தில் உள்ளார். மற்றொரு ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி 211 ரன்களுடன் 3ஆவது இடத்தில் உள்ளார். 4ஆவது மற்றும் 5ஆவது இடங்கள் முறையே மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்மன்ப்ரீத் கவுர் 205 ரன்கள் மற்றும் ஹேலீ மேத்யூஸ் 203 ரன்கள் எடுத்துள்ளனர்.