IPL Final 2023 CSK vs GT: நீங்களா நானானு பார்த்துருவோம்.. பாடாய் படுத்தும் மழை..! ஆட்டம் பாதிப்பு
ஐபிஎல் 16வது சீசனின் இறுதிப்போட்டி இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்றும் முதல் இன்னிங்ஸுக்கு பின் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
ஐபிஎல் 16வது சீசனின் இறுதிப்போட்டி நேற்று (மே28) நடந்திருக்க வேண்டியது. மழை காரணமாக இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவரும் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடிவருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் ரிதிமான் சஹா ஆகிய இருவரும் அடித்து ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 20 பந்தில் 7 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் விளாசிய கில்லை தோனி ஸ்டம்பிங் செய்து அனுப்பினார். அதன்பின்னரும் நன்றாக அடித்து ஆடி அரைசதம் அடித்த சஹா 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
சஹாவுடன் இணைந்து நன்றாக பேட்டிங் ஆடிய சாய் சுதர்சன், சஹாவின் விக்கெட்டுக்கு பின், செட்டில் பேட்ஸ்மேன் என்ற முறையில் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து அடித்து ஆடி சதத்தை நெருங்கிய சாய் சுதர்சன், கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளையும் சிக்ஸர்கள் விளாசி சதத்தை நெருங்கிய சாய் சுதர்சன் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். ஹர்திக் பாண்டியா அடித்து ஆடி 12 பந்தில் 21 ரன்கள் அடித்து முடித்து கொடுக்க, 20 ஓவரில் 214 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 215 ரன்கள் என்ற கடின இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்தது.
ஐபிஎல் ஃபைனலில் 214 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோரை குஜராத் டைட்டன்ஸ் அடிக்க, 215 ரன்கள் என்ற கடின இலக்கை சிஎஸ்கே விரட்ட தொடங்கிய நிலையில், முதல் ஓவர் வீசிக்கொண்டிருந்த போதே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. நேற்று மழை பெய்ததால் ஆட்டம் ரிசர்வ் டே-வான இன்றைக்கு மாற்றப்பட்டது. இன்றும் மழை பெய்துவருகிறது.