IPL 2023: எப்பேர்ப்பட்ட பிளேயரை கழட்டிவிட்டு பெரிய தப்பு பண்ணிட்டீங்களே..! கேகேஆரை விமர்சித்த ஸ்காட் ஸ்டைரிஸ்
ஷுப்மன் கில்லை விடுவித்து கேகேஆர் அணி மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாக விமர்சித்துள்ளார் ஸ்காட் ஸ்டைரிஸ்.
ஐபிஎல் 16வது சீசன் நேற்றுடன் முடிந்திருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று நடக்கும் ஃபைனலில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன.
இந்த சீசனில் நிறைய இளம் வீரர்கள் அபாரமாக ஆடி அனைவரையும் கவர்ந்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா, நெஹல் வதேரா ஆகிய பேட்ஸ்மேன்கள் அபாரமாக பேட்டிங் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இந்திய அணியில் இடம்பிடிக்கும் அளவிற்கு தங்களது திறமையை நிரூபித்தனர்.
இந்த சீசனில் இவர்கள் அனைவரையும் விட மிக அபாரமாக ஆடி அசத்தியவர் என்றால் அது ஷுப்மன் கில் தான். ஆனால் கில் வயதில் இளம் வீரராக இருந்தாலும், ஐபிஎல் அனுபவத்தில் இவர்களுக்கெல்லாம் சீனியர் என்பதாலும் இந்திய அணியில் ஏற்கனவே இடம்பிடித்து ஆடிவருகிறார் என்பதாலும், அவரது அபாரமான ஆட்டத்தில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.
இந்த சீசனில் மிகச்சிறப்பாக ஆடி முக்கியமான போட்டிகளில் எதிரணிகளை அடித்து துவம்சம் செய்த ஷுப்மன் கில், 3 சதங்களுடன் 851 ரன்களை குவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான 2வது தகுதிப்போட்டியில் 129 ரன்களை குவித்து குஜராத் அணி 233 ரன்களை குவிக்க உதவி, மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி காரணமாக திகழ்ந்தார். சிஎஸ்கேவிற்கு எதிரான ஃபைனலில் 123 ரன்கள் அடித்தால், ஒரு சீசனில் அதிக ரன்களை குவித்த விராட் கோலியின் சாதனையை முறியடிப்பார். ஆனால் ஃபைனலில் 123 ரன்கள் அடிப்பது கடினம் என்பதால் கோலியின் சாதனையை முறியடிப்பது கடினம் என்றாலும், இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபைனலுக்கு வர முக்கிய காரணமாக திகழ்ந்திருக்கிறார்.
2021 ஐபிஎல் வரை கேகேஆர் அணிக்காக ஆடிய ஷுப்மன் கில்லை, 2022 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக அந்த அணி கில்லை விடுவித்தது. கில் மீது நம்பிக்கை வைத்து குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்திற்கு முன்பாகவே கோர் அணியை செட் செய்தபோது கில்லை எடுத்தது. அவர் மீது குஜராத் அணி வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல் கில் கடந்த சீசனில் அபாரமாக ஆடி அறிமுக சீசனில் குஜராத் அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். இந்த சீசனிலும் குஜராத் அணி ஃபைனலுக்கு வர காரணமாக இருந்திருக்கிறார்.
இந்நிலையில், ஷுப்மன் கில் குறித்து பேசிய ஸ்காட் ஸ்டைரிஸ், கேகேஆர் ஷுப்மன் கில்லை விடுவித்து மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டது. அதேபோல மற்றொரு மோசமான விடுவிப்பு என்றால், அது ஆர்சிபி கேஎல் ராகுலை விடுவித்தது. கில் இப்போதும் மிக இளம் வீரர். அவரது ஆட்டத்தில் இன்னும் எவ்வளவோ மேம்பட்டு பெரிய உயரங்களை எட்டுவார். அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஸ்டார் மட்டும் கிடையாது. உலக கோப்பையில் இந்தியாவின் ஸ்டாராகவும் திகழப்போகிறார் என்று ஸ்காட் ஸ்டைரிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.