ஐபிஎல் 16வது சீசனில் கேகேஆரை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி டி.எல்.எஸ் முறைப்படி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 16வது சீசனில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதின. மொஹாலியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
கேகேஆர் அணி:
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), மந்தீப் சிங், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், டிம் சௌதி, அனுகுல் ராய், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரான் சிங் (விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்சா, ஜித்தேஷ் ஷர்மா, சாம் கரன், சிக்கந்தர் ராஸா, ஷாருக்கான், ராகுல் சாஹர், நேதன் எல்லிஸ், ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங்.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து அதிரடியாக தொடங்கினார். முதல் 2 ஓவர்களையும் முழுமையாக ஆடிய பிரப்சிம்ரன் சிங், 12 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான தவான் மற்றும் பானுகா ராஜபக்சா இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக பேட்டிங் ஆடி 2வது விக்கெட்டுக்கு 86 ரன்களை சேர்த்தனர்.
அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பானுகா ராஜபக்சா 32 பந்தில் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, பொறுப்புடன் பேட்டிங் ஆடிய தவானும் 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க, செட்டில் ஆன பேட்ஸ்மேன்கள் இருவருமே டெத் ஓவர்களில் பேட்டிங் ஆட களத்தில் இல்லை. ஜித்தேஷ் ஷர்மா 11 பந்தில் 21 ரன்களும், சாம் கரன் 17 பந்தில் 26 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 191 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
192 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் மந்தீப் சிங் இறங்கினர். இன்னிங்ஸின் 2வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய அர்ஷ்தீப் சிங், அபாரமாக பந்துவீசி மந்தீப் சிங்(2) மற்றும் அனுகுல் ராய்(4) ஆகிய இருவரையும் அந்த ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார். வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக வெங்கடேஷ் ஐயரை இறக்கிவிட்டது கேகேஆர் அணி. ரஹ்மானுல்லா குர்பாஸும் 22 ரன்களுக்கு நேதன் எல்லிஸின் பந்தில் ஆட்டமிழக்க, 29 ரன்களுக்கே கேகேஆர் அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
4வது விக்கெட்டுக்கு வெங்கடேஷ் ஐயரும் நிதிஷ் ராணாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக பேட்டிங் ஆடினர். நிதிஷ் ராணா 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரிங்கு சிங் 4 ரன்னுக்கு நடையை கட்டினார். ஆண்ட்ரே ரசல் வழக்கம்போலவே அடித்து ஆடி 19 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் ஐயரும் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 16 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் அடித்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. அதன்பின்னர் மழை நிற்காததால் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.
டி.எல்.எஸ் முறைப்படி 16 ஓவரில் கேகேஆர் அணி 153 ரன்கள் அடித்திருக்க வேண்டும். ஆனால் 146 ரன்கள் மட்டுமே அடித்திருந்ததால் 7 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
