NZ vs SL: 2வது டெஸ்ட்டில் வில்லியம்சன், நிகோல்ஸ் இரட்டை சதம்..! மெகா ஸ்கோர் அடித்து நியூசிலாந்து டிக்ளேர்
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்ரி நிகோல்ஸ் ஆகிய இருவரின் அபாரமான இரட்டை சதங்களால் 580 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது நியூசிலாந்து அணி.
இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணி:
டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், டக் பிரேஸ்வெல், டிம் சௌதி (கேப்டன்), மேட் ஹென்ரி, பிளைர் டிக்னெர்.
இலங்கை அணி:
ஒஷாடா ஃபெர்னாண்டோ, திமுத் கருணரத்னே (கேப்டன்), குசால் மெண்டிஸ், ஆஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், தனஞ்செயா டி சில்வா, நிஷான் மதுஷ்கா, கசுன் ரஜிதா, பிரபாத் ஜெயசூரியா, லஹிரு குமாரா, அசிதா ஃபெர்னாண்டோ.
முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டாம் லேதம் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான டெவான் கான்வே 78 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் - ஹென்ரி நிகோல்ஸ் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் நங்கூரம் போட்டு பேட்டிங் ஆடினர்.
அபாரமாக பேட்டிங் ஆடிய வில்லியம்சன் மற்றும் நிகோல்ஸ் ஆகிய இருவருமே இரட்டை சதம் அடித்தனர். வில்லியம்சன் 215 ரன்களையும், நிகோல்ஸ் 200 ரன்களையும் குவித்தனர். இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 363 ரன்களை குவித்தனர். அவர்களது அபாரமான இரட்டை சதங்களால் முதல் இன்னிங்ஸில் 580 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது நியூசிலாந்து அணி.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் கருணரத்னேவும் பிரபாத் ஜெயசூரியாவும் களத்தில் உள்ளனர்.