ஐபிஎல் 16வது சீசனின் முதல் சில போட்டிகளில் ஆடாத ஜோஷ் ஹேசில்வுட் ஏப்ரல் 14ம் தேதி ஆர்சிபி அணியுடன் இணையப்போவதாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் இன்று (மார்ச் 31) தொடங்குகிறது. இன்று அகமதாபாத்தில் நடக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், சிஎஸ்கே 4 முறையும் கோப்பையை வென்றுள்ள நிலையில், விராட் கோலி என்ற தலைசிறந்த வீரரை அணியில் பெற்றிருந்தும் ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.
ஒவ்வொரு சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கி கடைசியில் ஏமாற்றத்துடன் சீசனை முடிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளது ஆர்சிபி அணி. கடந்த சீசனுக்கு முன்பாக விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியதால், ஃபாஃப் டுப்ளெசிஸின் தலைமையில் கடந்த சீசனில் ஆடிய ஆர்சிபி அணி, இந்த சீசனிலும் அவரது கேப்டன்சியிலேயே ஆடுகிறது.
IPL 2023: அவங்கதான் இருக்குறதுலயே செம டீம்.. பாண்டிங்கே பார்த்து பயப்படும் பயங்கரமான அணி
இந்த முறை பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே வலுவான அணியாகவும் நல்ல பேலன்ஸான அணியாகவும் திகழ்கிறது. அந்த அணியின் பேட்டிங் எல்லா சீசன்களிலும் சிறப்பாகவே இருந்திருக்கிறது. பவுலிங் தான் பலவீனமாக இருந்தது. இந்நிலையில், இந்த சீசனில் ஆர்சிபி அணியின் பவுலிங் யூனிட் தான் மிகச்சிறந்த யூனிட்டாக அமைந்த மகிழ்ச்சியில், வலுவான மற்றும் பேலன்ஸான அணியாக இருக்கும் திருப்தியில் உள்ளது ஆர்சிபி.
ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு ஆப்படிக்கும் விதமாக, ஆர்சிபி அணி மிகுந்த நம்பிக்கையுடன் ஏலத்தில் எடுத்த இங்கிலாந்து அதிரடி வீரர் வில் ஜாக்ஸ் காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகினார். அவரைத்தொடர்ந்து ரஜத் பட்டிதார், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய வீரர்கள் முதல் பாதி சீசனிலிருந்து விலகினர்.
ஆர்சிபி அணி ரூ.7.75 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கிய ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் ஜோஷ் ஹேசில்வுட் முதல் பாதி சீசனிலிருந்து விலகியுள்ளார். காயம் காரணமாக இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறாத ஜோஷ் ஹேசில்வுட் முதல் பாதி ஐபிஎல் சீசனிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
IPL 2023: முதல் போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
இந்த சீசனில் தான் ஆர்சிபி அணியின் பவுலிங் யூனிட் வலுவாக இருக்கிறது என கருதப்பட்ட நிலையில், ஜோஷ் ஹேசில்வுட் விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு. அவருக்கு பதிலாக இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ரீஸ் டாப்ளி ஆடுவார்.
இந்நிலையில், ஏப்ரல் 14ம் தேதி ஆர்சிபி அணியுடன் இணைவேன் என்று ஜோஷ் ஹேசில்வுட் உறுதிப்படுத்தியுள்ளார். ஏப்ரல் 2ம் தேதி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக முதல் போட்டியை ஆடும் ஆர்சிபி அணி, ஏப்ரல் 14க்கு முன்பாக மொத்தமாகவே 3 போட்டிகளில் மட்டுமே ஆடுவதால் அதன்பின்னர் ஹேசில்வுட் அணியில் இணைந்துவிடுவார் என்பதால் அது பெரிய பின்னடைவாக அமையாது.
