ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடக்க இருந்த 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் கொரோனா காரணமாக இந்த ஆண்டு 2023 நடந்து வருகிறது. சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகளை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். நேற்று நடந்த தொடக்க விழாவில் அனைத்து அணிகளும் சிறப்பு அணி வகுப்பு நடத்தினர். இந்தியா சார்பில் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் லோவ்லினா போர்கோஹைன் இருவரும் இணைந்து தேசிய கொடியை ஏந்தி அணி வகுப்பு நடந்தினர்.
இதையடுத்து இன்று காலை முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. முதலில் நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய மகளிர் அணி முதல் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. இதையடுத்து மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. இதில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பேட்டிங்கும் ஆடியது. ஆனால், இந்திய மகளிர் அணி வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்த்ரகர் வேகத்தில் வங்கதேச மகளிர் அணியினர் ஒவ்வொருவராக வெளியேறினர். தொடக்க வீராங்கனைகளான சதி ராணி, ஷமிமா சுல்தானா ஆகியோர் டக் அவுட்டில் ஆட்டமிழந்தனர்.
சொர்ணா அக்டெர், ஃபஹிமா கடூன், மரூபா அக்டெர் ஆகியோரும் டக் அவுட்டில் ஆட்டமிழந்தனர். இதில், கேப்டன் நிகர் சுல்தானா அதிகபட்சமாக 12 ரன்கள் எடுத்தார். ஷோபனா மோஸ்டரி 8 ரன்களும், ரிது மோனி 8 ரன்களும், ரபேயா கான் 3 ரன்களும், நகிடா அக்டெர் 9 ரன்களும், சுல்தானா கடூன் 3 ரன்களும் எடுக்க, எக்ஸ்ட்ராவாக 8 ரன்கள் கொடுக்க வங்கதேச அணி 51 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பந்து வீச்சு தரப்பில் பூஜா வஸ்த்ரகர் 4 விக்கெட்டுகளும், டைட்டஸ் சாது, அமன்ஜோத் கவுர், ராஜேஸ்வரி கயக்வாட், தேவிகா வைத்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய மகளிர் இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 7 ரன்களிலும், ஷபாலி வர்மா 17 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 20 ரன்களும், கனிகா அஹூஜா 1 ரன்னும் எடுக்க இந்திய அணி 2 விக்கெட் இழந்து 52 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை காலை 11.30 மணிக்கு இறுதிப் போட்டி நடக்கிறது.
ரூ.450 கோடி பட்ஜெட், வாரணாசி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!
இன்று காலை 11.30 மணிக்கு நடக்கும் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி, இலங்கை மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இதில், வெற்றி பெறும் அணி நாளை காலை நடக்க உள்ள போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளும்.
