விளையாட்டை வளர்க்கும் வித்தையை சத்குருவிடம் கற்றுக் கொள்ளலாம் - புகழாரம் சூட்டிய அமைச்சர் அனுராக் தாகூர்!
"நம் தேசத்தில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பாரம்பரிய கலைகளை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை சத்குருவிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்” என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் திரு. அனுராக் தாகூர் கூறியுள்ளார்.
பாரத தேசத்தின் மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமைக்குரிய ‘ஈஷா கிராமோத்சவம்’ திருவிழாவின் இறுதிப் போட்டிகள் கோவை ஈஷா யோக மையத்தில் இன்று (செப்.23) மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அமைச்சர் திரு. அனுராக் தாகூர் பரிசளிப்பு விழாவின் போது பேசுகையில், “ஈஷா கிராமோத்சவம் திருவிழாவை 2004-ம் ஆண்டு முதல் ஈஷா நடத்தி வருகிறது. இன்று நடக்கும் 15-வது கிராமோத்சவ விழாவில் நான் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன். இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் முழு நேர, தொழில்முறை விளையாட்டு வீரர்கள் கிடையாது. தின கூலி வேலைக்கு செல்பர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் என பல விதமான வேலை செய்பவர்கள் தான் இப்போட்டியில் வீரர்களாக களம் கண்டு வென்றுள்ளனர். இது தான் இத்திருவிழாவின் சிறப்பு.
விளையாட்டு போட்டிகள் மட்டுமின்றி இங்கு 1,200 பேர் ஒன்று சேர்ந்து கும்மியாட்டத்தையும் ஆடி காட்டியுள்ளனர். இதுதவிர பல்வேறு கிராமிய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இத்திருவிழாவில் நடத்தப்பட்டுள்ளது. இதை காண ஆயிரக்கணக்கில் மக்கள் வந்துள்ளீர்கள். இவை அனைத்தையும் சாத்தியப்படுத்தியுள்ள சத்குரு அவர்கள், வாழ்க்கையையே ஒரு விளையாட்டு தன்மையுடன் அணுக கூடிய கூல் குருவாக இருக்கிறார். விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைகளை வளர்க்கும் வித்தை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்” என்றார்.
கேரளாவில் இருந்து லாரிகளில் கொண்டுவந்து கொட்டப்படும் கழிவுகள்; குமரியில் பொதுமக்கள் ஆவேசம்
மேலும், விளையாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேசுகையில், “இந்தாண்டு 1,000 இடங்களில் கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் தொடங்கப்பட உள்ளதாகவும், யோகா, களரி, மல்லர்கம்பம் உள்ளிட்ட 5 பாரம்பரிய கலைகளை கேலோ இந்தியா திட்டத்தில் சேர்த்துள்ளோம். இதேபோல், பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கும் காலமும் கூடிய விரைவில் வரும்” என்றார்.
இதை தொடர்ந்து சிறப்புரையாற்றிய சத்குரு அவர்கள் “ஈஷா கிராமோத்சவம் திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் 25,000 கிராமங்களில் இருந்து சுமார் 60,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜாதி, மதம், ஆண், பெண், வயது என எல்லா வேறுபாடுகளையும் கடந்து அவர்கள் ஒற்றுமையுடன் விளையாடி உள்ளனர்.
போட்டியிட்டு வெற்றி பெறும் நோக்கத்திற்காக நாம் இந்த கிராமோத்சவத்தை நடத்தவில்லை. இதன்மூலம், இதில் பங்கெடுத்த வீரர்கள் மற்றும் பார்வையிட்ட ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் உருவாக்க இந்த விளையாட்டு போட்டிகளை நடத்தி உள்ளோம். வாழ்க்கையில் விளையாட்டு தன்மை இல்லாமல் போனால், வாழ்க்கை பெரும் சுமையாகிவிடும். குறிப்பாக, ஏழ்மை நிலையில் இருக்கும் கிராமப்புற மக்களின் வாழ்க்கை ஆனந்தமாகவும் உற்சாகமாகவும் இருக்க ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்ற அவசியம்” என்றார்.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் திரு. தன்ராஜ் பிள்ளை அவர்கள் பேசுகையில், “நான் 1995-ம் ஆண்டு முதல் ஈஷாவிற்கு வந்து செல்கிறேன். 1996-ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஹாக்கி அணியுடன் ஈஷாவிற்கு வந்து 25 நாட்கள் தங்கி யோகா பயிற்சி எடுத்தேன். எனக்கும் ஈஷாவிற்குமான தொடர்பு என்பது 28 வருடங்களாக நீடித்து வருகிறது” என்றார்.
நடிகர் திரு. சந்தானம் பேசுகையில், “நான் பள்ளியில் சுமாராக படிக்கும் மாணவனாக இருந்தேன் . ஆனால், பேச்சுப் போட்டி, நாடகப் போட்டியில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. இதை கண்டறிந்த ஒரு ஆசிரியர் எனக்கு ஊக்கம் அளித்தார். அதனால் தான் நான் சினிமா துறைக்கு வந்தேன். அதேபோல், கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களின் திறமையை கண்டறிந்து ஊக்குவிப்பதற்கு ஈஷா கிராமோத்சவம் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். நீங்கள் மனது வைத்தால் உங்களால் சச்சின், தோனியை போன்று வெற்றி பெற முடியும்” என்றார்.
ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கிய விளையாட்டு போட்டிகளின் இறுதிப் போட்டிகள் ஆதியோகி முன்பு இன்று நடைபெற்றது. தென்னிந்திய அளவிலான வாலிபால் போட்டியில் சேலத்தை சேர்ந்த உத்தம சோழபுரம் அணி, அதே மாவட்டத்தைச் சேர்ந்த சித்தராசபுரம் அணியை வீழ்த்தி சாம்பியம் பட்டம் வென்றது. தென்னிந்திய அளவிலான பெண்களுக்கான த்ரோபால் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த புள்ளா கவுண்டன் புதூர் அணி, கர்நாடகாவைச் சேர்ந்த மரக்கோடு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
மேலும், தமிழ்நாடு அளவில் நடந்த கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஈரோடு அணி விருதுநகர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பெண்கள் பிரிவில் ஈரோடு அணி திண்டுக்கல் அணியை வீழ்த்தி சாம்பியம் பட்டம் வென்றது.
வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசு தொகைகள் மற்றும் பாராட்டு கேடயங்கள் வழங்கி கெளரவித்தனர்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இப்போட்டிகளை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் கண்டு களித்தனர். மேலும், பார்வையாளர்கள் பங்கேற்பதற்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
எனக்கு எதுவும் தெரியாது; அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லி பயணம் குறித்து வானதி விளக்கம்