20 ஆண்டுகளுக்குப் பிறகு கொலவெறியில் இந்தியா; ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க பொன்னான வாய்ப்பு!
20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா முதலில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்றது. இதில், இந்தியா முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. 3ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி வாகை சூடியது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடியவே, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டியின் நடுவிலேயே இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கனவு உறுதியானது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெறவே, இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இரண்டாவது இடத்தை பிடிக்க இந்தியா-இலங்கை இடையே போட்டி நிலவியது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை தோல்வியடையவேஎ இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதையடுத்து, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வரும் ஜூன் 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒரு நாள் உலக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது. இதில் ரிக்கி பாண்டிங் 140 ரன்களும், மார்டின் 88 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். கில்கிறிஸ்ட் 57 ரன்கள் எடுத்தார். ஹைடன் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிபட்சமாக விரேந்திர சேவாக் 82 ரன்கள் எடுத்தார். ராகுல் டிராவிட் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதன் மூலம் ஆஸ்திரேலியா 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இதையடுத்து, 20 ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்க்க இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், இந்தியா வெற்றி பெற்று அதற்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியாவும் ஒரு நாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது. வரும் ஜூன் 7 ஆம் தேதி நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஐசிசி டிராபியை புதிதாக தன் வசப்படுத்திக் கொள்ளும்.
இரண்டாவது முறையாக இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. எனினும், 2019-2021 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்த நியூசிலாந்து சாம்பியன் படத்தை அசால்ட்டாக தட்டி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.