புஜாரா, கில்லுக்கு பவுலிங் தந்தது ஏன்? 17 ஓவருக்கு முன்பே டிக்ளேர் செய்ய காரணம்? வெளியானது உண்மை தகவல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியின் 5ஆம் நாளில் புஜாரா மற்றும் கில் ஆகியோர் ஏன் பவுலிங் செய்தார்கள் என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தப் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றி சாம்பியனானது. கடந்த 9 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 91 ரன்கள் முன்னிலை பெற்றது. இதில், ஷும்பன் கில் 128 ரன்களும், விராட் கோலி 186 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 2 ஆவது இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்னஸ் லபுஷேன் மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் நின்னு விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் லபுஷேன் அரைசதம் அடித்தார். இந்தப் போட்டியில் யாரலயும் வெற்றி பெற முடியாது. கண்டிப்பாக போட்டி டிரா தான் என்பது இரு அணியினருக்கும் தெரிந்த நிலையில், ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்வதாக இல்லை. வெறும் 17 ஓவர்கள் தான் எஞ்சியிருந்த நிலையில், இந்திய வீரர்கள் பந்து வீசட்டும் நாம் விளையாடிக் கொண்டிருப்போம் என்று ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லபுஷேன் இருவரும் இந்திய பவுலர்களை சோதிக்க தொடங்கினர்.
இதனால் சுதாரித்துக் கொண்ட நம்ம கேப்டன் ரோகித் சர்மா, அவர்களது பாணியில் அவர்களுக்கு பதிலடி கொடுத்தார். அஸ்வின், அக்ஷர் படேல், ஜடேஜா ஆகியோருக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு, திடீரென்று வருபவர்களுக்கு ஓவர் தரப்படும் என்பது போன்று செயல்பட்டார். இதனால் சட்டீஸ்வர் புஜாராவுக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தது. 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா இதுவரை ஒரே ஒரு ஓவர் தான் வீசியுள்ளார். ரஞ்சி டிராபி தொடரில் பந்து வீசி 2ஆவது பந்திலேயே விக்கெட்டும் எடுத்துள்ளார். தொடர்ந்து அவருக்கு பவுலிங் பயிற்சி கொடுத்தால் அவராலும் விக்கெட்டுகள் எடுக்க முடியும்.
இதனை தொடர்ந்து சுப்மன் கில்லும் பந்து வீசினார். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரும் அடுத்தடுத்து ஓவர் வீசுவதாக இருந்தது. போதும், இதோடு நிறுத்திக் கொள்வோம் என்ற முடிவுக்கு வந்த ஸ்டீவ் ஸ்மித், கில் பந்து வீசும் போதே டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இதனால், 17 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இந்தியாவும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை தோல்வியை தழுவிய நிலையில், இந்தியா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வரும் ஜூன் 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.