ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் சாதனையை முறியடித்துள்ளது இந்திய அணி. 

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

2வது ஒருநாள் போட்டி நேற்று டிரினிடாட்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 311 ரன்களை குவித்தது. 

இதையும் படிங்க - Axar Patel Record: தோனி, யூசுஃப் பதானின் நீண்டகால சாதனையை தகர்த்த அக்ஸர் படேல்..!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஷேய் ஹோப்பின் அபார சதம் (115), நிகோலஸ் பூரனின் அதிரடி அரைசதம் (74) ஆகிய இருவரின் அபாரமான பேட்டிங்கால் 50 ஓவரில் 311 ரன்களை குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

312 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் (63) மற்றும் சஞ்சு சாம்சன் (54) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். ஆனால் அவர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் ஆட்டமிழந்ததால் 39 ஓவரில் 205 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது இந்திய அணி. அதன்பின்னர் களத்திற்கு வந்த அக்ஸர் படேல் அதிரடியாக பேட்டிங் ஆடி 35 பந்தில் 64 ரன்களை குவிக்க, அவரது அதிரடி அரைசதத்தால் கடைசி ஓவரில் இலக்கை எட்டி இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தொடர்ச்சியாக 12வது ஒருநாள் தொடரை வென்றுள்ளது இந்தியா. இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

இதையும் படிங்க - என்னை பொறுத்தமட்டில் அவன் ஆல்ரவுண்டரே கிடையாது..! இந்திய வீரரை துச்சமாக மதிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ்

இதற்கு முன் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக தொடர்ச்சியாக 11 ஒருநாள் தொடர்களை வென்றதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தொடர்ச்சியாக 12 ஒருநாள் தொடர்களை வென்று சாதனை படைத்துள்ளது இந்தியா.