Eng vs Aus 5th Test: போராடி தோற்ற ஆஸ்திரேலியா: தொடரை 2-2 என்று சமன் செய்த இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என்று சமன் செய்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் நடந்தது. ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடத்தப்படும் ஆஷஸ் தொடரில் 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது. 6 முறை ஆஷஸ் தொடர் டிராவில் முடிந்துள்ளது. தற்போது 7ஆவது முறையும் ஆஷஸ் தொடரானது டிரா செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2021- 22 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் கோப்பையை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. ஆனால், இங்கிலாந்தில் 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை கைப்பற்றியது கிடையாது. இங்கிலாந்தில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடர் டெஸ்ட் போட்டி நடந்து வந்தது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்ட் போட்டியிலும், 3ஆவது போட்டியில் இங்கிலாந்தும், 4ஆவது போட்டி டிரான ஆன நிலையில், 5ஆவது போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்துள்ளது.
தோனியின் முதலீட்டு நிறுவனங்கள்: ட்ரோன், கதாபுக், 7 இங்க் ப்ரீவ்ஸ், ஸ்போர்ட்ஸ்ஃபிட்!
இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 283 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா 295 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 12 ரன்கள் பின் தங்கிய நிலையில், இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை ஆடி 395 ரன்கள் எடுத்தது. இதன் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு 383 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஜோடி முதல் விக்கெட்டிற்கு 140 ரன்கள் சேர்த்தனர். இதில், வார்னர் 60 ரன்களில் ஆட்டமிழக்க, கவாஜா 72 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் 13 ரன்னில் நடையை கட்டினார். ஒருபுறம் நிதானமாக ரன்கள் சேர்த்து வந்த டிராவிஸ் ஹெட் 70 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பொறுப்பை உணர்ந்து ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக அலெக்ஸ் கேரி மட்டும் 28 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக ஆஸ்திரேலியா 334 ரன்கள் மட்டுமே எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலமாக இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதோடு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2-2 என்று சமன் செய்தனர்.