கடந்த 28 ஆண்டுகளாக பாதுகாப்பான கரங்களின் நடுவே இருந்ததாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிஎஸ்ஜி படையினருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவருடைய குடும்பத்தினரான  சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்காவுக்கு எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கபட்டது. பின்னர் காங்கிரஸ் தலைவராக சோனியா இருந்தபோதும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் இந்தப் பாதுகாப்பு தொடர்ந்தது. 2014-ல் முதன்முறையாக மோடி அரசு அமைந்த பிறகு இந்தப் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டுவந்தது. ஆனால், இரண்டாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தபிறகு எஸ்.பி.ஐ. பாதுகாப்பை சோனியா காந்தி குடும்பத்துக்கு வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.
எஸ்.பி.ஜி.யின் பாதுகாப்பு முடிவுக்கு வந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எஸ்.பி.ஐ. படையினருக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் தனது கருத்தைப் பதிவிட்டார். இந்நிலையில்  எஸ்.பி.ஜி. பாதுகாப்புப் படையினர் மிகச் சிறப்பான பாதுகாப்பை தங்களுக்கு வழங்கியதாக அந்த அமைப்பின் தலைவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நன்றி தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக எஸ்.பி. ஜி. தலைவர் அருண் சின்ஹாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”எங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளித்தமைக்காக இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அர்ப்பணிப்பு, விவேகம், தனிப்பட்ட கவனம் போன்ற தீவிர பணியில் எஸ்.பி.ஜி. படையினர் இருந்தனர். கடந்த 28 ஆண்டுகளாக பாதுகாப்பான கரங்களின் நடுவே நாங்கள் இருந்தோம்” என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.