12வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாளை 09.10.2020 தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் அடைக்கப்படுவதாக அந்த சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், குறும்பட்டியை சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான வாலிபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், சிறுமிக்கு உரிய நிதி கிடைக்கும் வகையில் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நாளை சலூன் கடைகள் மூடப்படவுள்ளன. தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்கம், தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம் ஆகியவை சார்பில் இந்த கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.
இந்த வழக்கில் கிருபானந்தன் (19) என்பவர் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை திண்டுக்கல் மகிளாநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த 30ஆம் தேதிகிருபானந்தன் விடுதலை செய்யப்பட்டார். அவர் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறிய நீதிபதிபுருஷோத்தமன் அவரை விடுதலைசெய்தார்.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.கே.ராஜா கூறும்போது, சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே இந்த கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார். சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் நடத்தும் கடைகள் மட்டுமின்றி மற்ற பெரிய கடைகளும் நாளை மூடப்படுகிறது. இதற்கு அந்த கடை உரிமையாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனால் நாளை மாநிலம் முழுவதும் அனைத்து சலூன் கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும். தமிழக அரசும், போலீசாரும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். இல்லையென்றால் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் முடிதிருத்தும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மருத்துவர் சவுரத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வியாசை செல்வராஜ் கடையடைப்பு தகவலை தெரிவித்துள்ளார்.