மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகருக்கு இதோ, அதோ என தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது.

ஜெயலலிதா மரண மர்மம, ஒ.பி.எஸ் - சசிகலா இடையே முட்டல் மோதல், சிறைக்கு சென்ற சசிகலா, எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் சிறைவைப்பு,  நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுகவின் அதகளம், அடித்து பிடித்து முதல்வர் பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமி, போதாத குறைக்கு ஜல்லிக்கட்டு போராட்டம், ஹைட்ரோ கார்பன் போராட்டம், மீனவர் போராட்டம் என தமிழகத்தின் பல ரண களங்களுக்கு இடையே ஆர்.கே நகர் தேர்தல் நடைபெற உள்ளது. 

திமுக மற்றும் ஒ.பி.எஸ் - சசிகலா அணியினருக்கு இது வாழ்வா ? சாவா ? போராட்டம் ஆகும். ஜெயலலிதாவின் செல்வாக்கிற்கு முன்னால் வெறும் 24,000 வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை கோட்டை விட்டது திமுக.

விட்டதை பிடிக்க வேண்டும் எண்ணத்தோடு இழந்த அரசியல் கவுரத்தை மீண்டும் பிடிக்கவேண்டும் என ஆக்ரோஷத்தோடு களமிறங்க உள்ளது திமுக. திமுகவுக்கு இந்த பிரச்சனை என்றால் அதிமுக சசிகலா அணியினருக்கோ ஆட்சியைதக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற பரிதவிப்பு ஒருபக்கம்.

தமிழகம் முழுவதும் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஆர்.கே நகரில் வெற்றி பெற்றால் மட்டுமே மக்களிடையே தங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்பதையும் மக்கள் சக்தி என்றைக்குமே தங்களை ஆதரிக்கும் என்ற பிம்பத்தை தக்கவைத்து கொள்ள வேண்டிய கட்டாயம் சசிகலா அணியினருக்கும் தினகரனுக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால், அத்தொகுதி மண்ணின் மைந்தரான ஜெயகுமார், வெற்றிவேல் மற்றும் தேர்தல் சித்து வேலைகளில் கரை கண்ட முன்னாள் அமைச்சர் அரவங்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, அமைச்சர் வேலுமணி, உள்ளிட்ட செயல்வீரர்களை இறக்கி வெற்றிக்கனியை பறிக்க தயாராகி விட்டது அதிமுக.

ஒ.பி.எஸ் அணிக்கும் இது வாழ்வா? சாவா? போராட்டம் தான். தீபாவை ஆதரிப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா என ஆலோசனையில் இறங்கி உள்ளார்களாம்.

தீபா ஒத்துகொண்டால் கைகோர்த்து போட்டியிடுவது இல்லையெனில் தனித்து நின்றே ஒரு கை பார்த்து விடலாம் என களத்தில் குதிக்க இருக்கிறார்களாம்.

எது எப்டியோ ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தல் தமிழக பிரதான கட்சிகளுக்கு வைத்துள்ள வாழ்வா சாவா போராட்டம் தான்.