பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கும் அதிமுக-வின் மாண்புமிகுக்களுக்கும் உள்ள தொடர்புகளையும் விசாரிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆகவே , 2 ஆண்டுகளுக்கு பின் திடீர் திருப்பமாக வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.அதிமுக நகர மாணவர் அணி செயலாளர் பதவியில் இருந்து அருளானந்தம் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘’பெண்களுக்கு அதிகாரம் அளித்தோம்' என அரசுப்பணத்தில் அடிமைகள் விளம்பரம் செய்து கொண்டுள்ள இந்த நாளில்  அதிமுக நகர மாணவரணி செயலாளர் உட்பட 3 பேர் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ளனர். வன்கொடுமை குற்றவாளிகளை பாதுகாப்பது தான் அதிகாரமளித்தலா?

 

அதிமுகவின் பெரிய இடத்துப் பிள்ளைகளுக்கு பொள்ளாச்சி வழக்கில் தொடர்புள்ளது என தலைவர் அவர்கள் அன்றே சொன்னார். கைதான குற்றவாளிகளுக்கும் அதிமுக-வின் மாண்புமிகுக்களுக்கும் உள்ள தொடர்புகளையும் விசாரிக்க வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி கிடைக்கும்’’என அவர் தெரிவித்துள்ளார்.