Asianet News TamilAsianet News Tamil

சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் திமுக..! திராவிட மாடல் என சொல்வது வெட்கக்கேடானது-ஸ்டாலினை விளாசும் ஓபிஎஸ்

 ஏற்கெனவே அரசாங்கப் பணிகளில் தலையிட்டு வரும் தி.மு.க.வினர், அரசுப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால்,  திமுகவினர் தங்களுக்கு வேண்டியவர்களை பணியில் நியமிப்பதற்கும், அதன்மூலம் பணியின் தரம் குறைவதற்கும் வாய்ப்பு இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

OPS has opposed the move to privatize government jobs in Tamil Nadu
Author
First Published Nov 9, 2022, 11:06 AM IST

அரசுபணிகள் தனியார்மயம்

அரசுப் பணிகளை தனியார்மயமாக்க முயற்சிக்கும் திமுக அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒவ்வொரு ஆண்டும் பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள் என்ற முறையில் ஐந்தாண்டுகளில் ஐம்பது இலட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க., இன்று இருக்கின்ற அரசுப் பணிகளை எப்படி வெளிமுகமை (Outsourcing) மூலம் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து ஆணை பிறப்பித்திருப்பதைப் பார்க்கும்போது "உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் வெல்லமும்" என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. மனித வளம் தொடர்பான சீர்திருத்தங்கள் என்று நிதிநிலை அறிக்கையில் சொல்லிவிட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக மனிதவள மேலாண்மைத் துறை மூலம் 18-10-2022 நாளிட்ட அரசாணை எண் 115 வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆணையில் குழுவின் ஆய்வு வரம்புகளாக பன்முக வேலைத் திறனோடு பணியாளர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு அமைதல்,

தமிழகத்தில் 10% என்பது அதீத இட ஒதுக்கீடு.! 8 லட்சம் என்ற ஆண்டு வருமான வரம்பை குறைக்க வேண்டும்-கே.பாலகிருஷ்ணன்

திமுக அரசு இரட்டை வேடம்

அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்கள், பதவிகள், பணிகள் ஆகியவற்றை திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்ளுதல், 'டி' மற்றும் 'சி' பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புதல், பணியாளர்களை ஒப்பந்த முறையில் நியமித்து குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்களின் பணிச் செயல்பாடுகளை ஆய்வு செய்து அவர்களை காலமுறை ஊதியத்தில் அமர்த்துதல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவின் ஆய்வு வரம்புகளை (Terms of Reference) பார்க்கும்போது அரசு இயந்திரத்தை தனியாரிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு சமூகநீதிக்கு மூடுவிழா நடத்த தி.மு.க. அரசு தயாராகிவிட்டது என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஒரு புறம் அரசுப் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் சமூகநீதிக்கு எதிராக ஒரு குழுவை அமைத்துவிட்டு, மறுபுறம் அரசுப் பணிகளின் அனைத்து நிலைகளிலும் சமூகநீதிக் கொள்கைகளை செயல்படுத்த சட்ட வல்லுநர் குழுவை அமைத்திருப்பது முன்னுக்குப் பின் முரணானது. தி.மு.க. அரசின் இரட்டை வேடத்திற்கு மற்றுமொரு சான்று.

தனியார் துறையில் உள்ள நிபுணர்களை இணைச் செயலாளர் நிலையில் மத்திய அரசு நியமித்தபோது, இது மத்திய அரசின் திறமையின்மைக்கு ஒரு சான்று என்றும், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்காமல் சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் நடவடிக்கை என்றும் விமர்சித்தவர் தி.மு.க. தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். ஆனால், இன்று ஒட்டுமொத்த அரசுப் பணிகளையுமே தனியாருக்கு காவு கொடுக்கத் தயாராகிவிட்டது தி.மு.க. அரசு. மாண்புமிகு முதலமைச்சரின் கூற்றுப்படி பார்த்தால், சமூக நீதிக்கு சங்கு ஊதும் நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டிருக்கிறது.

ஆளுநர் ஆர்.என் ரவியை நீக்க வேண்டும்..! குடியரசு தலைவரிடம் எம்பிக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஒப்படைப்பு

ஊழல் பெருகுவதற்கு வாய்ப்பு

ஏற்கெனவே அரசாங்கப் பணிகளில் தலையிட்டு வரும் தி.மு.க.வினர், அரசுப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், அவர்கள் மூலம் திமுகவினர் தங்களுக்குவேண்டியவர்களை பணியில் நியமிப்பதற்கும், அதன்மூலம் பணியின் தரம் குறைவதற்கும், இடஒதுக்கீடு என்பதே இல்லாமல் போவதற்கும், அரசின் ரகசியங்கள் வெளியிலே செல்வதற்கும், ஊழல் பெருகுவதற்கும் வழிவகுக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அரசு வேலைவாய்ப்பு என்பதே இல்லாமல் போய்விடும் சூழ்நியை உருவாகும். தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை அரசுப் பணிகளில் சேர வேண்டும். என்ற ஆர்வமுடைய ஏழையெளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் கனவை சிதைப்பது போல் அமைந்துள்ளது. மனித வள மேலாண்மைத் துறை என்று பெயரிட்டுவிட்டு, மனித வளத்தை சிறுமைப்படுத்தும் பணியில் ஈடுபடுவது ஓர் அரசுக்கு அழகல்ல, 

திராவிட மாடல்- வெட்கக்கேடானது

இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை எல்லாம் எடுத்துவிட்டு அதை ‘திராவிட மாடல்” என்று சொல்லிக் கொள்வது வெட்கக்கேடானது. தி.மு.க. அரசின் அரசுப் பணியாளர் விரோத நடவடிக்கைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி மூன்றரை இலட்சம் காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட இதர அமைப்புகள் மூலம் உடனடியாக நிரப்புவதற்கும், புதிதாக இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 18-10-2022 நாளிட்ட மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை எண் 115-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் 5 இடங்களில் மண்டல மாநாடு..? தொண்டர்களை திரட்டி இபிஎஸ்க்கு அதிர்ச்சி அளிக்க திட்டம் தீட்டிய ஓபிஎஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios