ஆளுநர் ஆர்.என் ரவியை நீக்க வேண்டும்..! குடியரசு தலைவரிடம் எம்பிக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஒப்படைப்பு
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெறக்கோரி குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் அலுவலகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் எம்பிக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஒப்படைக்கப்பட்டுள்ளது
ஆளுநர் - தமிழக அரசு மோதல்
தமிழகத்தில் ஆளுநராக செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி தமிழக அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புகார் கூறி வருகின்றனர். தமிழக சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக தெரிவிக்கப்பட்டது. அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை வெளிப்படுத்தும் வகையில் பேசியதாகவும் புகார் எழுந்தது. மேலும் திருக்குறளில் ஆன்மிகம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாகவும் திருக்குறள் ஒரு ஆன்மிக நூல் என பேசியிருந்தார். இதற்க்கும் திமுக மட்டுமில்லாமல் பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் துணை வேந்தர்களை கூட்டத்தை ஆளுநர் தன்னிச்சையாக கூட்டியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள்
இந்தநிலையில் கோவை கார் குண்டு வெடி விபத்தை விமர்சித்து நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் உரையாற்றினார். அப்போது கோவை வெடிவிபத்து சம்பவத்தை தமிழக அரசு என்ஐஏக்கு வழக்கை மாற்றம் செய்ததில் காலம் தாழ்த்தியதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும் காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். இதே போல மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் எந்த ஒரு நாடும் ஒரு மதத்தை சார்ந்து தான் இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கூட்டணி கட்சிகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டு அவர் அரசிலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதால்தான் இந்தளவுக்கு இதற்கு முக்கியத்துவம் தர வேண்டி உள்ளது. இதனை விடப் பெரிய பதவி எதையாவது எதிர்பார்த்து பா.ஜ.க. தலைமையை மகிழ்விக்க ஆர்.என். ரவி அவர்கள் இப்படிப் பேசுவதாக இருந்தால், அவர் தனது ஆளுநர் பதவியை விட்டு விலகி விட்டு, இதுபோன்ற கருத்துகளைச் சொல்லட்டும். மாறாக, அப்பொறுப்பில் இருந்துகொண்டு பேசுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என காட்டமாக தெரிவித்திருந்தது.
குடியரசு தலைவரிடம் கோரிக்கை மனு
இதனையடுத்து திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு திமுக கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் அந்த மனுவில் கையெழுத்திட அழைப்பு விடுத்திருந்தார். இதனையேற்று திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நாடளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இருந்தனர். அந்த கோரிக்கை மனுவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அலுவலகத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு வழங்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்