தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 95 சதவிகிதமான மக்கள் இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சுமார் 5 சதவிகிதம் மக்களுக்கு மட்டுமே சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு இல்லையென தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களுக்கு 10 சதவிகிதமான இட ஒதுக்கீடு வழங்குவது என்பது அதீத ஒதுக்கீடாக அமைந்து விடும் என தெரிவித்துள்ளது. 

சிபிஎம் ஆலோசனை கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதில், பொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் வராத பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிடும் வகையில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சட்டத் திருத்தம் ஏற்புடையதே என்று உச்சநீதிமன்ற அமர்வில் இடம்பெற்றிருந்த மூன்று நீதிபதிகளும், ஏற்க இயலாது என இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் மேற்கண்ட சட்டத்திருத்தம் செல்லத்தக்கது. 

அரசியல் சட்டத்தின் இதயத்தில் அடிப்பதுபோல் உள்ளது! இட ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு! துரைமுருகன்

சட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு

பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்திற்கு ஏற்புடையதா? இல்லையா? என்ற வழக்கில் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ள இரண்டு நீதிபதிகள் கூட பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்திற்கு முரணானது அல்ல என்றே தெரிவித்துள்ளனர். அதேசமயம்,வேறு விசயங்களில் மாறுபட்ட கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் வராத பிரிவினருக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி சட்டத்திருத்தத்தினை நிறைவேற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கோரி வந்துள்ளது. இந்த நிலைபாட்டின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட போது அத்திருத்தத்தை கட்சி ஆதரித்தது. 

அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..! நவ.12 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

வருமான வரம்பை குறைக்க வேண்டும்

ஆனால், அதே நேரத்தில் இச்சலுகை பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ. 8 லட்சம் ஆண்டு வருமான வரம்பு என்பதை குறைத்து தீர்மானிக்க வேண்டுமென அப்போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அழுத்தமாக வலியுறுத்தியது. வருமான வரம்பு குறைக்கப்பட வேண்டும் என இப்போதும் வலியுறுத்துகிறோம். இச்சட்டத்திருத்தத்தை தமிழகத்தில் அமலாக்கும் போது கீழ்க்கண்ட அம்சங்களை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென வற்புறுத்துகிறோம். அரசமைப்பு சட்டப்பிரிவுகள் 15 மற்றும் 16க்கு மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 10 சதவிகிதம் வரை (Subject to a maximum of 10 percent) இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், நாடு முழுவதும் இப்பிரிவினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென கட்டாயப்படுத்தவில்லை. 

10% அதீத ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் அதிகாரப்பூர்வமற்ற தகவலின்படி ஏறக்குறைய 95 சதவிகிதமான மக்கள் இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சுமார் 5 சதவிகிதம் மக்களுக்கு மட்டுமே சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு இல்லை என விபரங்கள் தெரிவிக்கிறது. இவர்களுக்கு 10 சதவிகிதமான இட ஒதுக்கீடு வழங்குவது என்பது அதீத ஒதுக்கீடாக அமைந்து விடும். எனவே, தமிழ்நாட்டில் இதுவரை இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்வதற்கான ஒரு ஆணையத்தை அமைத்து அதன் பரிந்துரைகள் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென சிபிஐ (எம்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

60-க்கும் அதிகமான சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு..! அரசியல் ஆதாயத்திற்காக பலி கொடுக்க தயாராகும் திமுக- வானதி