தமிழகத்தில் 5 இடங்களில் மண்டல மாநாடு..? தொண்டர்களை திரட்டி இபிஎஸ்க்கு அதிர்ச்சி அளிக்க திட்டம் தீட்டிய ஓபிஎஸ்
அதிமுகவில் தனக்கு உள்ள பலத்தை காட்டும் வகையில் சென்னை, மதுரை,திருச்சி உள்ளிட்ட 5 மண்டலங்களில் மாநாடு நடத்த ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஒற்றை தலைமை மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார். இந்த நிலையில் அதிமுக தங்களுக்கு தான் சொந்தம் என இரு தரப்பும் உரிமை கொண்டாடி வருகின்றனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார். அவர் செல்லும் இடங்களிலும் அதிமுக தொண்டர்கள் ஆர்வமோடு திரண்டு வருகின்றனர்.
மண்டல மாநாடு நடத்த திட்டம்
இந்தநிலையில் அதிமுகவில் தனக்கு தான் தொண்டர்கள் செல்வாக்கு உள்ளதாக கூறும் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களை இதுவரை சந்திக்கவில்லையென இபிஎஸ் தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இதனையடுத்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமித்து வருகிறார். இதன் அடுத்த கட்டமாக கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சென்னை இடங்களில் அதிமுக மண்டல மாநாடு நடத்த ஓபிஎஸ் அணியினர் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளை மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே விரைவில் அதிமுக மண்டல மாநாடு தொடர்பான அறிவிப்பை ஓ.பன்னீர் செல்வம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டில் தனக்கு தொண்டர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை காட்டும் வகையில் கூட்டத்தை திரட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்