Asianet News TamilAsianet News Tamil

இளைஞர்களின் கனவில் மண்ணை போடும் திமுக.! மவுன சாமியாராக இல்லாமல் நடவடிக்கை எடுத்திடுக- ஸ்டாலினை விளாசும் இபிஎஸ்

படித்த இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்பு கனவை சீர்குலைக்கும் அரசாணை எண் 115-ஐ திரும்பப் பெற வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
 

EPS demands that the government order should be canceled regarding the committee set up for recruitment to government jobs
Author
First Published Nov 8, 2022, 1:12 PM IST

அரசு பணியில் தனியார் நிறுவனங்கள்

அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயாலளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கி புறவாசல் வழியே ஆட்சியைப் பிடித்த இந்த விடியா திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கு தொடர்கதையாகி வருகிறது. திமுக ஆட்சிக்கு வர முன்களப் பணியாளர்களாக செயல்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பட்டை நாமம் தீட்டும் வகையிலும், படித்த ஏராளமான இளைஞர்களின், அரசு வேலை என்ற கனவில் மண்ணை வாரிப் போடும் வேலையில் தற்போது இந்த விடியா அரசின் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு வருகிறார். ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவேன் என்று தேனொழுக தேர்தல் நேரத்தில் பேசி, திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கைகழுவிவிட்டார், 

தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாமக முழு ஆதரவு..! ராமதாஸ் அறிக்கை

அரசு ஊழியர்களை ஏமாற்றிய திமுக

மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தியபோதெல்லாம், அம்மாவின் அரசு உடனுக்குடன் முன் தேதியிட்டு வழங்கிய அகவிலைப்படி உயர்வை இந்த விடியா திமுக அரசு நிறுத்தியுள்ளது. ஆண்டாண்டு காலமாக அரசு பணிக்கு, தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், காவலர் தேர்வு வாரியம் போன்ற அரசு ஏஜென்சிகள் மூலமாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இப்படி அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதன் மூலம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டுவந்த 69 சதவீத இட ஒதுக்கீடு அரசு வேலைவாய்ப்புகளில் கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் சமூக நீதி உறுதி செய்யப்படுவதோடு, நேர்மையான முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த விடியா அரசு, இனி அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இப்படி தனியார் நிறுவனங்கள், ஆட்களை பணியமர்த்துவதன் மூலம் 69 சதவீத இட ஒதுக்கீடு என்ற உன்னத திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையில் இந்த விடியா அரசு இறங்கியுள்ளது என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு

இதற்காக, தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறை அரசாணை எண். 115 என்ற ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையின்படி மனித வள சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. M.F. பரூக்கி அவர்கள் தலைமையிலான இந்த குழு ஆறு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஆய்வு வரம்புகள் தமிழகத்தில் படித்த இளைஞர்களின் எதிர்கால அரசு வேலை என்ற கனவுகளுக்கும், 69 சதவீத இட ஒதுக்கீடு என்ற சமூக நீதிக்கும் மூடுவிழா காண்பதாக உள்ளது. அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்களை திறன் அடிப்படையில், ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்வது, பிரிவு டி மற்றும் சி பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது,

ஓபிஎஸ் அணிக்கு புதிதாக மாநில நிர்வாகிகள், கொள்கை பரப்புச் செயலாளர்கள் நியமனம்..! யார், யார் தெரியுமா.?

சமூக நீதிக்கு எதிரான செயல்

தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற மூன்றாவது முகமை அதாவது, வெளி முகமை ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பட்டியலிட்டு, பல்வேறு நிலை மனித வள அரசுப் பணியிடங்களை, அவற்றைக் கொண்டு நிரப்புவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது, அரசின் உயர்நிலைப் பணியிடங்களை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு அப்பணியிடங்களின் வேலைத்திறன் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை ஆராய்தல்போன்ற சில ஆய்வு வரம்புகள் மிகவும் கவலைஅளிப்பதாக உள்ளது. இந்த உத்தரவு பணியாளர் விரோத நடவடிக்கை மட்டுமல்லாது, சமூக நீதிக்கும் எதிரானதாகும்.

அரசாணையை ரத்து செய்ய வேண்டும்

அரசு வேலைக்காக இரவும் பகலும் படிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்கால கனவில், அடிவேரில் திராவகம் ஊற்றி பொசுக்கச் செய்யும் இந்த குதர்க்கவாத விடியா திமுக அரசின் செயலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறை அரசாணை எண் 115-ஐ பெரும்பாலான அரசு ஊழியர் அமைப்புகளும் எதிர்க்கின்றன. படித்த இளைஞர்களின் வருங்காலத்தைப் பாழாக்கும் இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்த விடியா அரசின் பொம்மை முதலமைச்சரை வற்புறுத்துகிறேன். வழக்கம் போல் மவுன சாமியாராக நாடகமாடினால், பாதிக்கப்படும் படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

கோவை குண்டு வெடிப்பை வெளிக்கொண்டு வந்தது நாங்கள் தான்..! பாஜகவிற்கு திமுக நன்றி சொல்ல வேண்டும்- அண்ணாமலை
 

Follow Us:
Download App:
  • android
  • ios