- Home
- Tamil Nadu News
- டப்பா எஞ்சின்.. யார் யாருக்கு தலைமை-னு தெரியல.. மோடி, EPS-ஐ கலாய்த்த முதல்வர் ஸ்டாலின்
டப்பா எஞ்சின்.. யார் யாருக்கு தலைமை-னு தெரியல.. மோடி, EPS-ஐ கலாய்த்த முதல்வர் ஸ்டாலின்
மக்களின் தேவையறிந்து திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறேன். மக்கள் சொல்லும் குறைகளை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் சொல்லும் குறைகளையும் காது கொடுத்து கேட்டு அதை சரி செய்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் உதவி இல்லாமல் சாதனை
தனியார் பத்திரிகை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்தியா முழுவதும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், அதாவது டபுள் எஞ்சின் என்று அவர்கள் சொல்லும் டப்பா எஞ்சின் ஓடும் மாநிலங்களில் இப்படி ஒரு வளர்ச்சியை காட்டிட முடியுமா? முடியவே முடியாது! அவர்கள் செய்வதெல்லாம் வன்முறை, வெறுப்பு பேச்சு, பிற்போக்குவாதம். இதற்கு அப்படியே நேர்மாறான, முற்போக்கு அரசு எங்கள் திராவிட மாடல் அரசு.
முக்கியமாக நீங்கள் குறித்துக்கொள்ள வேண்டியது, நாங்கள் செய்த சாதனைகளையெல்லாம் ஒன்றிய அரசின் உதவி இல்லாமலேயே சாதித்திருக்கிறோம். இன்னும் சொல்ல போனால் அவர்களின் நெருக்கடிகளை மீறி சாதித்திருக்கிறோம்.
நினைத்ததை விட வேகமான பயணம்
2021-ஆம் ஆண்டிலேயே பத்தாண்டுகளுக்கான Vision-னோடுதான் நான் வந்தேன். ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள் என்று 2031 வரைக்குமான தொலைநோக்கு குறிக்கோள்களை சொல்லிவிட்டுத்தான் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றேன். நான் நினைத்ததை விட, அதிக வேகத்தில் அதைநோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். அண்மையில் வெளியான மாநில பொருளாதார ஆய்வறிக்கையும் அதைத்தான் சொல்கிறது.
“தமிழ்நாடு இதே வளர்ச்சியை தக்க வைத்துக்கொண்டால், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடையும்” என்று அதில் சொல்லியிருக்கிறார்கள். அதனால், என்னுடைய Vision-யை
Reality-ஆக மாற்றுவதற்கு, அடுத்த 5 ஆண்டுகளும், இதே ‘Mission Mode’-இல் நாங்கள் உழைப்போம்.
எதிர்க்கட்சிகள் சொல்லும் குறைகளையும் சரி செய்கிறேன்
என்னை பொறுத்தவரை, மக்களின் தேவையறிந்து திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறேன். மக்கள் சொல்லும் குறைகளை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் சொல்லும் குறைகளையும் காது கொடுத்து கேட்டு அதை சரி செய்கிறேன்.
நேற்று மதுரை வந்த மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள், மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலப் பணிகள் தாமதம் பற்றி குற்றம் சாட்டி அதை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அவர் கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.க.தான் இந்த திட்டம் வரக்கூடாது என்று தடை செய்தார்கள். வழக்கிலும் வாதாடினார்கள். இந்த பணிகள் நாங்கள் வந்து, இந்த ஒன்றிய அரசிடம் சொல்லி இப்போதுதான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
பொய்யை அவிழ்த்துவிடும் மோடி
தி.மு.க. ஆட்சி என்றால் வளர்ச்சி! வளர்ச்சி என்றால் தி.மு.க. ஆட்சி! என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும், பிரதமர் மோடி அவர்களுக்கு சொல்ல சாதனைகள் இல்லாததால், தேர்தல் நேரத்தில் பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
இதை விட பெரிய காமெடியும் நேற்று மேடையில் அவர்கள் பேசும்போது நடந்தது. என்னவென்றால், பழனிசாமி அவர்கள் ‘அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்’ என்று சொல்கிறார். அவரை மேடையில் வைத்துக்கொண்டே, பிரதமர் மோடி அவர்கள் ‘NDA ஆட்சி’ அமையும் என்று சொல்கிறார். யாருக்கு யார் தலைமை என்றே தெரியாமல்தான் இவர்கள் கூட்டணி இருக்கிறது.
அதனால்தான், நான் என்னுடைய பிரசாரத்தை தொடங்கியபோதே இந்த தேர்தல் ‘Tamil Nadu Vs NDA’ என்று தெளிவாக சொன்னேன்.
இதை நான் சொன்னபோது சிலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், பிரதமர் மோடி அவர்களும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களும் ஒவ்வொருமுறை தமிழ்நாட்டிற்கு வரும்போதும் நான் சொன்னதை உறுதிப்படுத்தி செல்கிறார்கள்.
தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்ற இந்த தேர்தலில் நிச்சயம் தமிழ்நாடு வெல்லும்! அந்த திராவிட மாடல் 2.0-வில் எங்கள் Record-யை நாங்களே Beat செய்வோம்!

