Asianet News TamilAsianet News Tamil

தனியார் பள்ளிகளை வளர்த்து அரசுப் பள்ளிகளுக்கு சமாதி..!!6 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு இடபெயர்வு..!!

ஆண்டுதோறும் ரூ.100 கோடிக்கு மேல் செலவும் செய்திருக்கிறது. இதனால் தனியார் பள்ளியில்தான் தரமான கல்வி கிடைக்கும் என்று அரசாங்கமே சொல்கிறது என்று பெற்றோர்கள் நினைக்கும் நிலை உருவாகிவருகிறது

memorial for government schools by growing private schools, 6 lakh students migrate to private schools
Author
Chennai, First Published Aug 17, 2020, 11:08 AM IST

அரசுபள்ளிகளை பாதிக்கும் தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அரசே ஏற்று நடத்துவதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:-கல்வி ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை. அதை முறையாக அளிக்க வேண்டியது அரசின் கடமை. இதைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை 2009-ல் இயற்றியது.

இதன்படி 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கட்டாயமாக்கப்பட்டது. இதன் சிறப்பம்சமாக நலிவுற்ற குழந்தைகளுக்கு அருகிலுள்ள தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டன. குழந்தைத் தொழிலாளர்கள், கைவிடப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினர், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் உள்ளிட்டவர்கள் நலிவுற்றவர்கள் வகையில் அடங்குவர்.2009-ல் 2014 வரை தனியார் பள்ளிகளே, நலிவுற்ற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி வந்தன. ஆனால் அதில் முறைகேடு நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தனியார் நிர்வாகங்கள் தங்களுக்கு ஆதரவானவர்களின் குழந்தைகளை அந்த ஒதுக்கீட்டில் பள்ளியில் சேர்த்துக்கொள்வதாகவும் அவர்களிடம் முழுக் கட்டணத்தையும் வசூலிப்பதாகவும் புகார்கள் அதிகரித்தன. 

memorial for government schools by growing private schools, 6 lakh students migrate to private schools

இதனால் அரசே குழந்தைகளைத் தேர்வு செய்து தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகிறது. இதற்காக 2017-ல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அரசே வருடத்திற்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவர்களை தனியார் பள்ளிக்கு தாரைவார்த்துக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடிக்கு மேல் செலவும் செய்திருக்கிறது.  இதனால் தனியார் பள்ளியில்தான் தரமான கல்வி கிடைக்கும் என்று அரசாங்கமே சொல்கிறது என்று பெற்றோர்கள் நினைக்கும் நிலை உருவாகி வருகிறது முன்பெல்லாம் தனியார் பள்ளிகளே இட ஒதுக்கீட்டு முறையை மேற்கொண்டன. முதன்மைக் கல்வி அலுவலரும் மாவட்டக் கல்வி அலுவலரும் அதைக் கண்காணித்தனர். ஆனால் இப்போது இடங்களை ஒதுக்கும் திட்டத்தை அரசே கையில் எடுத்துள்ளது. அவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் செலுத்திவிடுகிறது. இதனால் தனியார் பள்ளிகளுக்கு 'கரும்பு தின்னக் கூலி வழங்கப்பட்டுவருகிறது. இதனால் அரசுப்பள்ளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தெருத் தெருவாக அலைந்து வீடு வீடாகச் சுற்றி மாணவர்களைச் சேர்க்கின்றனர். தனியார் பள்ளிகள் இருந்த இடத்திலேயே சுலபமாக சேர்க்கையை அதிகரித்துவிடுகிறது. இதனால் போதிய மாணவர்கள் இல்லாமல் அரசுப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் அதிகரித்து வருகிறது.

memorial for government schools by growing private schools, 6 lakh students migrate to private schools

2013 முதல் 2019வரை சுமார் 6 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில்  இருந்து தனியார் பள்ளிக்கு மாறியிருக்கின்றனர். இவர்களுக்காக சுமார் 1000 கோடி ரூபாய்க்குமேல் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையினை அரசுப் பள்ளிகளுக்கு செலவழித்து செம்மைப்படுத்தி இருக்கலாம். அரசுபள்ளிகளில் தரமானகல்வி சிறப்பாக உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் சமம் என்ற நிலை உருவாகும். அப்போது பாகுபாடின்றி கல்வித்தரம் உயரும்'' தற்போது 25 சதவீதம் மாணவர்களை தனியார்பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எதிர்வரும் 17.08.2020 தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. 2009 கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவுற்றவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்தப்படும். ஆனால் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் 3 வேளை உணவுக்கே வழியில்லாதவர்களுக்கு மதியஉணவு உள்ளிட்ட சலுகைககள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. கட்டாயக்கல்வி உரிமை சட்டம் 2009 ன்படி 25 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடைபிடிக்கப்படுகிறதா என்பதை அரசு கண்காணிக்கவேண்டும். மேலும் அரசுபள்ளிகளை காப்பாற்ற தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அரசே ஏற்று நடத்துவதை கைவிடுவதற்கு ஆவனசெய்யும்படி மாண்புமிகு. முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறது. என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios