இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் விளம்பர அரசியலை கைவிட்டு மக்களை காக்க பிரதமர் மோடி முன்வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பிரதமர் மோடி எடுக்கும் முடிவுகள் ஜனநாயக உணர்வோடு கலந்தாலோசனை செய்யாமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்டு வருவதால் பல்வேறு துன்பங்களை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இதற்கு பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவை சான்றுகளாகும். இந்தியாவை அச்சுறுத்தி வரும் கரோனா நோயை எதிர்த்து பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கைகள் கடும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன.

சீனாவில் உஹான் நகரத்தில் கரோனா பாதிக்கப்பட்டபோது அந்த நகரத்தின் எல்லைகள் மூடப்பட்டு யாரும் உள்ளே வரவோ, வெளியே செல்லவோ முடியாத அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதுபோன்ற ஒரு நடவடிக்கையை தலைநகர் தில்லி உள்ளிட்ட சில நகரங்களில் எடுத்திருந்தால் லட்சக்கணக்கான இடம் பெயரலையும், கரோனா நோய் பரவலையும் தடுத்திருக்க முடியும். இந்த சூழலில் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இருந்து நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை நோக்கி சில நண்பர்களுடன் நடைபயணமாக வந்த 21 வயது நிரம்பிய மாணவர் லோகேஷ் பாலசுப்ரமணியன் செகந்தராபாத் நகரத்திற்கு வந்தபோது மயங்கி கீழே விழுந்திருக்கிறார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறப்பட்டு, அவரது சடலம் பள்ளிபாளையத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. எந்த தவறையும் செய்யாத லோகேஷ் பாலசுப்ரமணியம் இறப்புக்கு யார் பொறுப்பு? இதற்கான பொறுப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வாரா? இத்தகைய கொடூர சம்பவங்கள் நடப்பதற்கு பிரதமர் மோடியின் ஆட்சி தான் காரணம் என்று குற்றம் சாட்ட விரும்புகிறேன். இந்த உயிரிழப்பு ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக குறிப்பிட விரும்புகிறேன். எனவே, பிரதமரே, போதும் இழப்பு. இனியாவது கரோனா ஒழிப்பில் தீவிரம் காட்டுங்கள். மலிவான விளம்பர அரசியலை தவிர்த்து ஆரோக்கியமான உரிய நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்ற முன்வாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.