இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் கை சின்னத்தில் லைட் எரிந்தது..! தேர்தல் தோல்விக்கு காரணத்தை பட்டியலிட்ட இபிஎஸ்
திமுக-வினர் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, விஞ்ஞான ரீதியிலான தில்லுமுல்லுகளைச் செய்து, பல்வேறு அராஜகங்களையும், வன்முறைகளையும் நிகழ்த்தி, பணநாயகத்தின் மூலம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை குறுக்கு வழியில் வெற்றிபெற வைத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக மீது அதிருப்தியில் மக்கள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பட்டயலிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு அமைந்த இந்த 22 மாத காலத்தில், விடியா திமுக ஆட்சி மக்கள் விரோத, ஜனநாயக விரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை மக்கள் அனைவரும் அறிந்தே இருக்கிறார்கள். அதே வகையான ஜனநாயகப் படுகொலையை ஈரோடு (கிழக்கு) தொகுதி இடைத் தேர்தல் திமுக அரங்கேற்றியது. விடியா திமுக ஆட்சியில், மின்கட்டண உயர்வால், சொத்து வரி உயர்வால், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தங்களை தேர்தல் களத்தில் புறக்கணிப்பார்கள் என்பதை உணர்ந்த திமுக, கூட்டணிக் கட்சியிடம் தொகுதியைக் கொடுத்துவிட்டு மறைந்திருந்து வேலை செய்தது.
'ஈரோடு கிழக்கு பார்முலா'
தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் நாள் தொடங்கி, மக்கள் பெரும் அதிருப்தியை ஆளும் திமுக கூட்டணி மீது வெளிப்படுத்தினார்கள். இதனால் தோல்வி உறுதி என்று தெரிந்த திமுக, ஈவு இரக்கமற்ற வகையில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கத் தொடங்கியது. 'திருமங்கலம் பார்முலா' என்கிற பெயரில் மக்கள் வாக்குகளை விலைபேசியதைப் போல, 'ஈரோடு கிழக்கு பார்முலா' என்ற ஒன்றை உருவாக்கி, ஆடு மாடுகளை அடைப்பதைப் போல், வாக்காளர்களை அடைத்து வைத்து அருவருக்கத்தக்க ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருக்கிறது ஆளும் திமுக, எதிர்க்கட்சியின் பரப்புரைகள் மக்கள் காதுகளிலேயே விழாத அளவிற்கு அவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள். "மக்களை அடைத்து வைத்தால், மக்கள் அடைக்கப்பட்டிருக்கின்ற இடத்திற்கே சென்று மக்களை சந்திப்பேன்" நான் எச்சரித்த பிறகு,
எலுமிச்சை பழத்தின் மீது சத்தியம்
பேருந்துகளில் மக்களை அடைத்து சுற்றுலா அழைத்துச் செல்லும் புது பார்முலாவை அறிமுகப்படுத்தியது திமுக. என அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, உணவு, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி திமுக-வின் மிரட்டல் அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது. திமுக-வின் 'மக்கள் அடைப்பு 'முகாம்கள்' ஈரோடு (கிழக்கு) தொகுதி முழுவதும் பரவலாக முளைத்திருந்தன. அந்த இடத்திற்கு வர மறுத்த அப்பாவி மக்கள் திமுக-வினரால் மிரட்டப்பட்டார்கள். “வாக்காளர் பட்டியலில் முறைகேடு, மக்களை அடைத்து வைத்தல், கட்டற்ற முறையில் பணம், மது, பரிசுப் பொருட்கள் விநியோகித்தல், மக்களை மிரட்டி அச்சமூட்டுதல், கடவுள் நம்பிக்கை கொண்ட மக்களை கோயில் முன்னால் நிறுத்தி எலுமிச்சை பழத்தின் மீது சத்தியம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி வாக்குக் கொள்ளை நடத்தல்" என்று திமுக நடத்திய வரலாறு காணாத அட்டூழியங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளிக் கொண்டுவந்தும், புகார்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
பணத்தை பிடுங்கி விடுவோம்
ஜாதி, மத ரீதியாக மக்களைப் பிளந்து அதன்மூலமாக வாக்குகளைப் பெறும், வழக்கமான திமுக-வின் பாணியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அரங்கேற்றப்பட்டது, தலைமைச் செயலகத்தையே மூடி வைக்கும் அளவிற்கு சுமார் 30 அமைச்சர்களும், திமுக-வின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், நிர்வாகிகளும், ஈரோடு (கிழக்கு) தொகுதியில் முகாமிட்டு இந்த ஜனநாயகப் படுகொலையை திட்டமிட்டு அரங்கேற்றி இருக்கிறார்கள்.தேர்தல் நாளில் நீங்கள் வாக்கு அளிக்கும் போது எந்த சின்னத்திற்கு வாக்களிக்கிறீர்கள் என்று நாங்கள் கேமராக்களில் பார்ப்போம்; நீங்கள் கை சின்னம் தவிர்த்து வேறு சின்னத்தில் வாக்களித்தால் கொடுத்த பணத்தை பிடுங்கிக் கொள்வதோடு, அரசின் நலத் திட்டங்களையும் தடை செய்வோம் என்று பாமர மக்களை மிரட்டிய காணொளிகள் வெளியாகின,
வாக்கு பட்டியலில் மோசடி
தேர்தல் நாளன்று வாக்குப் பதிவிலும் தொடர் முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டன, பல வாக்குப் பதிவு மையங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களிக்க பொத்தானை அழுத்தியபொழுது, கை சின்னத்திற்கு நேரே இருக்கும் விளக்கு ஒளிர்ந்து வாக்குப் பதிவானது அதிர்ச்சி அளித்தது. இது பொதுமக்களால் புகாராக தெரிவிக்கப்பட்டும், ஊடகங்களால் சுட்டிக் காட்டப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எல்லாவற்றிற்கும் மேலாக, வாக்காளர் பட்டியலில் இருந்த 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் அந்தத் தொகுதியில் இல்லை. இருப்பினும், அந்தப் பகுதியில் வசிக்காத 40 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
வாக்காளர்களுக்கு நன்றி
திமுக ஏற்கெனவே திட்டமிட்டபடி, கடைசி ஒரு மணி நேரத்தில் அதிகமான வாக்குப் பதிவு செய்துள்ளது மிகப் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. இது போன்ற எல்லா அராஜக அத்துமீறல்களையும் அரங்கேற்றி ஒரு அருவருக்கத்தக்க ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி, அற்ப வெற்றியை வசப்படுத்தி இருக்கிறது ஆளும் திமுக. திமுக-வின் வெற்றி ஜனநாயகத்தின் தோல்வி... தமிழ் நாட்டின் அரசியல் அறத்தின் தோல்வி!! திமுக-வின் 22 மாத கால ஆட்சியின் அவலங்களை உணர்ந்து, ஆட்சியாளர்களின் போக்குக்கு சவுக்கடி கொடுக்கின்ற வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து, மாற்றத்திற்கு அச்சாரமிட்டிருக்கும் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியவர்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லுமா? செல்லாதா? ஓபிஎஸ் வழக்கு இன்று விசாரணை.. பீதியில் இபிஎஸ்..!