மது அருந்துவதற்கு இடையூறாக இருந்த அரசு பள்ளிக்கூடத்தின் சிசிடிவி கேமராக்களை உடைத்ததாக  திமுக பிரமுகரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கீழமட்டையான் கிராமத்தின் தி.மு.க., கிளைச் செயலாளர் சித்தாண்டி. மேலக்கால் ஊராட்சியின் துணைத் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றார். கீழமட்டையான் கிராமத்தில் உள்ள அரசுத் துவக்கப்பள்ளி அருகே தனது நண்பர்களுடன் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். மது அருந்திய பின் இவர்கள் செய்யும் ரகளை தாங்க முடியாமல் பள்ளிக்குப் பாதுகாப்பு தரும் வகையில் தனியார் அமைப்பு ஒன்று நான்கு இடங்களில் சிசிடிவி கேமராக்களை அமைத்து தந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி துணை தலைவர் சித்தாண்டி, ஆத்திரத்தில் இரண்டு முறை சிசிடிவி கேமராக்களை உடைத்துள்ளார். இரண்டு முறையும் மாற்று கேமராக்களை சம்மந்தப்பட்ட அமைப்பு மாற்றிக் கொடுத்துள்ளது. இதற்கிடையில் அதே இடத்தில் போதையில் நண்பர்களுடன் வந்த சித்தாண்டி, மீண்டும் சிசிடிவி கேமரா இருந்ததைக் கண்டு கடும் கோபம் கொண்டார். நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு பள்ளி அருகே சென்ற அவர், கீழே இருந்து கற்களால் எறிந்து கேமராவை உடைக்கும் காட்சி அதே கேமராவில் பதிவானது.

பள்ளி சிறுவர்கள் உள்ளிட்ட கிராமத்தினர் கேமராவை உடைக்க வேண்டாம் என கூறியும் அதை கேட்காமல் போதையில் கேமராவை உடைத்ததால் அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவியது.  சிசிடிவி உபயம் தந்த தனியார் அமைப்புக்குத் தகவல் தெரிந்து ஊராட்சி மன்றத் துணை தலைவர் சித்தாண்டி மீது காடுபட்டி போலீசாரிடம் புகார் அளித்தனர். சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்ததால் ஊராட்சி மன்ற துணைத் தலைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.