கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு அண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் தலைவர்கள் வீட்டு காவலில் வைப்பு, தொலைத்தொடர்பு துண்டிப்பு என பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டது. காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பியவுடன் படிப்படியாக கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டன.


இந்நிலையில், மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை எடுத்து சொல்வதற்கும், மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை மக்களிடம் கேட்கவும் மத்திய அமைச்சர்கள் 36 பேர் கொண்ட குழுவை ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மத்திய அரசு  அனுப்பியுள்ளது. மத்திய அமைச்சர்கள் அங்கு பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களிடம் கலந்துரையாடி வருகின்றனர். அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர்களில் 31 பேர் ஜம்முவில் மக்களை சந்தித்து பேசி வருகின்றனர். 5 அமைச்சர்கள் மட்டும் காஷ்மீர் பகுதிக்கு சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதோடு அங்குள்ள மக்களை சந்தித்து பேச உள்ளனர்.

mani shankar aiyar
காஷ்மீர் பகுதிக்கு அனைத்து அமைச்சர்களும் செல்லாமல் 5 பேர் மட்டுமே சென்று இருப்பதை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் கிண்டல் செய்துள்ளார். கேரளா மலப்புரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணி சங்கர் அய்யர் பேசுகையில், ஜம்மு அண்டு காஷ்மீருக்கு 36 அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் இந்த கோழைகளை பாருங்க, 31 பேர் ஜம்முவுக்கும், 5 பேர் மட்டுமே காஷ்மீருக்கும் செல்கின்றனர். அவர்கள் (அமைச்சர்கள்) காஷ்மீரில் யாரிடம் பேச போகிறார்கள்? முன்னாள் முதல் அமைச்சர்களிடமா, அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அப்பம் யாரிடம் அவர்கள் பேச போகிறார்கள்? என கிண்டலாக பேசினார்.