2020-21 நிதியாண்டில் இரண்டாம் அரையாண்டில் 10-10-2020 நாளது தேதி வரை சொத்து வரி செலுத்திய 5,18,286 சொத்து உரிமையாளர்களுக்கு சுமார் 4.56 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது எனவும், சொத்துவரியினை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தி தங்களது சொத்து வரியின் மீது விதிக்கப்படும் அபராத த்தொகையை தவிர்க்கவும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவு 104 இன் படி சொத்தின் உரிமையாளர்களால் அந்தந்த அரையாண்டு துவங்கிய முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரியானது பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டும். சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919க்கு, அரசால் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது, இச்சட்டத் திருத்தம் அரசாணையின்படி 1-10-2019 தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவர பெருநகர சென்னை மாநகராட்சி சிறப்பு அதிகாரி- மன்றம் அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து, சட்டத் திருத்தம் தொடர்பான விவரம் அரசிதழ், உள்ளூர் நாளிதழ்களில் அறிக்கையாக வெளியிடப்பட்டது.

அரசால் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி அரையாண்டு துவங்கிய முதல் 15 தினங்களில் சொத்து உரிமையாளர்களால் செலுத்தப்படும் சொத்து வரியில் ஊக்கத்தொகையாக 5 சதவீதம், அதிகபட்சமாக 5 ஆயிரம்  வரை அளிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சியால் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நடப்பு நிதியாண்டில்  2020-2021 இரண்டாம் அரையாண்டில் 10-10-2014 தேதி வரை சொத்து வரி செலுத்திய 5,18,286 சொத்து உரிமையாளர்களுக்கு செலுத்தப்பட்ட சொத்து வரியில் ரூபாய் 4.56 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 

 

மேலும் மேற்படி சட்ட திருத்தத்தின்படி அரையாண்டு துவங்கிய முதல் 15 தினங்களுக்குள் செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி செலுத்த படாமல் இருந்தால், செலுத்தப்பட வேண்டிய சொத்து வரியுடன் கூடுதலாக ஆண்டுக்கு 2% சதவீதம் மிகாமல் தனி வட்டி விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே சொத்து உரிமையாளர்கள் நடப்பு  நிதி ஆண்டின்  2020-2021 இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரிகளை குறிப்பிட்ட காலத்திற்குள், அதாவது வருகிற அக்டோபர் 15ஆம் தேதிக்குள் செலுத்தி தங்களது சொத்து வரியின் மீது விதிக்கப்படும் தண்டனையை தவிர்க்குமாறு ஆணையர் கே.பிரகாஷ் எச்சரித்துள்ளார்.