பழிக்கு பழி வாங்கிய அகிலேஷ்…முலாயம் சிங்கை நீக்கியதால் 2 ஆக உடைந்தது சமாஜ் வாடி

சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து முலாயம் சிங் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் புதிய தலைவராக முதலமைச்சர்  அகிலேஷ் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சமாஜ்வாடி கட்சி 2 ஆக உடைவது உறுதியாகியுள்ளது.

முலாயம் சிங் யாதவை தலைவராக கொண்ட சமாஜ் வாடி உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. அவரின் மகன் அகிலேஷ் மதலமைச்சராக உள்ளார். கட்சியின் தலைவர் பதவியை அகிலேசின் சித்தப்பா சிவபால் சிங் வகித்து வருகிறார்.ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் இம்மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த சில மாதங்களாக அகிலேசுக்கும், சிவ பால் சிங்குக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாட்டால் அக்கட்சி உடையும் நிலைக்கு தள்ளப்பட்டள்ளது. சிவபால் சிங்கின் இன்னொரு சகோதரர் ராம் கோபால் யாதவ் அகிலேசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

இதனால் இரு தரப்பினரும் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மாறி மாறி நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்தநிலையில் சமாஜ்வாடியின் தேசிய செயற்குழு லக்னோவில் உள்ள ஜானேஷ்வர் மிஸ்ரா பூங்காவில் அகிலேஷ் யாதவ் தலைமையில் நேற்று நடைபெறும் என ராம்கோபால் யாதவ் அறிவித்து இருந்தார்.

மகன் மற்றும் தம்பியின் நடவடிக்கைகளால் அதிர்ச்சியடைந்த முலாயம் சிங், 2 நாட்களுக்கு முன்பு அகிலேஷ் யாதவையும், ராம்கோபால் யாதவையும் 6 வருடங்களுக்கு கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

தந்தை–மகன் இடையே ஏற்பட்ட மோதலை மூத்த அமைச்சர் ஆசம்கான் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்தார். இதனால் சஸ்பெண்டு உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில் அதிரடி திருப்பமாக  பெரும்பான்மையான தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருப்பதை நிரூபிக்கும் வகையில் சமாஜ்வாடி கட்சியின்  தேசிய செயற்குழுவை கூட்டத்தை அகிலேஷ் யாதவும், ராம்கோபால் யாதவும் இணைந்து நேற்று லக்னோவில் கூட்டினர்.

இந்த கூட்டத்தில், சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து முலாயம் சிங் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அவரது மகன் அகிலேஷ் யாதவ் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

மேலும் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து சிவபால் சிங்கும்,இன்னொரு தலைவர் அமர்சிங்கும் நீக்கப்பட்டனர்.

சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைமை எடுத்த முடிவு குறித்து தேர்தல் கமி‌ஷனை அணுகி கட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தெரிவிக்கப்பபோவதாக புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அகிலேஷ் யாதவ்  கூறினார்.

ஆனால் ராம்கோபால் யாதவ் கூட்டிய கட்சியின் தேசிய செயற்குழு சட்டவிரோதமானது என்றும் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவும் செல்லாது என்றும் முலாயம் சிங் அறிவித்தார்.

மேலும் கட்சியின் தேசிய செயற்குழு முறைப்படி வருகிற 5–ந்தேதி நடைபெறும் என்றும்,ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்தான் அதிகாரப்பூர்வமானது என்றும் முலாயம் தெரிவித்தார்.

முலாயம் சிங்குக்கும், அகிலேஷ் யாதவுக்கும் இடையே நடக்கும் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்து இருப்பதால் சமாஜ்வாடி கட்சி 2 ஆக உடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.