மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் மகிளா ஆர்ட்ஸ் அண்டு காமர்ஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த 14ம் தேதி (காதலர் தினம்) நடந்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில்,  நாங்கள் யாரையும் காதலிக்க மாட்டோம், காதல் திருமணம் செய்ய மாட்டோம் என கல்லூரி நிர்வாகத்தினர் முதலில் கூற அதனை மாணவிகள் மறுபடி கூறி உறுதிமொழி எடுக்கின்றனர்.

இந்த சம்பவம் அரசியல் கட்சிகளுக்கு இடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.கல்லூரியின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக மகாராஷ்டிரா பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் யஷோமதி தாக்கூர் பேசியுள்ளார். வார்தாவில் இது போன்ற வழக்குகள் குறித்து எச்சரிக்கும் நோக்கில், கல்லூரி நிர்வாகம் மாணவிகளை உறுதி மொழி எடுக்க வைத்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அதேசமயம் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான பங்கஜா முண்டே கல்லூரியின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், கேலிக்குரியது! வெறும் விசித்திரமானது! அமராவதி சிந்தூரில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த பெண்கள் காதலிக்க மாட்டேன் மற்றும் காதல் திருமணம் செய்யமாட்டேன் என உறுதிமொழி எடுத்துள்ளனர். ஏன் பெண்கள் மட்டும் உறுதி மொழி எடுக்க வேண்டும். பெண்கள் மீது ஆசிட் வீச மாட்டேன் மற்றும் காதலை நிராகரித்தால் பெண்களை உயிருடன் எரிக்க மாட்டேன் என மாணவர்களையும் உறுதி மொழி எடுக்க வைக்க வேண்டும் என அதில் பதிவு செய்துள்ளார்.