அரசுப் பள்ளிக்கூடத்தின் சமையல் அறையில் திடீரென 60 பாம்புகள் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மராட்டிய மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில், பங்கரா பொகாரே என்ற கிராமத்தில் அரசுப் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. மராத்வாடா பகுதியில் இருந்து 225 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த பள்ளிக்கூடத்தின் சமையல் அறையில் ஏராளமான பாம்புகள் நுழைந்ததால் பெரும் களேபரம் நிகழ்ந்துள்ளது. 

அந்த பள்ளியின் ஸ்டோர் ரூமில், சத்துணவு ஊழிய பெண், மண்ணெண்ணெய் மற்றும் விறகு கட்டைகள் எடுப்பதற்காகச் சென்றார். அப்போது அங்கே 2 பாம்புகள் நெளிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

அவை கொடும் விஷம் நிறைந்த கண்ணாடி விரியன் வகையை சேர்ந்தவையாகும். அந்த பெண் கூச்சல் போடவே, மற்ற ஊழியர்கள் அங்கே திரண்டு வந்தனர். 2 பாம்புகளையும் அப்புறப்படுத்திய நிலையில், மேலும் ஏராளமான பாம்புகள் விறகு கட்டைகளை சுற்றி காணப்பட்டதால், ஊழியர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகினர். 

இதுபற்றி பள்ளி நிர்வாகம் சார்பாக, விக்கி தலால் என்ற பாம்பு பிடிக்கும் நபர் அழைத்து வரப்பட்டார். அவர், 2 மணிநேரத்திற்கும் மேலாக போராடி, ஒவ்வொரு பாம்பாக பிடித்து பாட்டிலில் அடைத்தார். எண்ணி பார்த்தபோது, மொத்தம் 60 பாம்புகள் இருந்தன. இவை அனைத்தும், அந்த பகுதியின் வனத்துறை அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன. 

இதுதொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர் திரியம்பாக் போஸ்லே கூறுகையில், ‘’ஏராளமான கண்ணாடி விரியன் பாம்புகளை ஒரே இடத்தில் பார்த்ததால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும், உள்ளூர் மக்கள் கற்கள், தடி, கம்பு போன்றவற்றை எடுத்துக் கொண்டு, பாம்புகளை அடித்துக் கொல்ல வந்தனர். அவர்களை நாங்கள் தடுத்து நிறுத்திவிட்டு, உயிரோடு பிடித்து,வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்தோம். அதனையே தற்போது செய்துள்ளோம். பாம்புகள் வந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்,’’ எனக் கூறினார். 

சமையல் அறையில் நுழைந்த பாம்புகள், பள்ளி வகுப்பறையில் நுழைந்திருந்தால் பெரும் விபரீதம் நிகழ்ந்திருக்கும் என்று, உள்ளூர் மக்கள் குறிப்பிடுகின்றனர்.