சமையல் கியாஸ் சிலிண்டரை ஆன்-லைனில் முன்பதிவு செய்து, பணம் செலுத்தினால் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.5 தள்ளுபடி தரப்படும் என அரசு எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஏற்கனவே பைக், கார், கனரக வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போடும் போது, பணம் இல்லா பரிவர்த்தனையை ஊக்கப்படுத்த, கிரெடிட், டெபிட் கார்டுகளில் பணம் செலுத்தினால், 0.75 சதவீதம் தள்ளுபடி தரப்படும் என மத்திய அரசு முன்பு அறிவித்து இருந்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது சமையல் கியாஸ் சிலிண்டருக்கும் தள்ளுபடி அளித்துள்ளது

இது குறித்து அரசு எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்துஸ்தான்பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் ஆன்-லைனில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் முன்பதிவு செய்து, ஆன்-லைனில் பணம் செலுத்தினால் சிலிண்டர் ஒன்றுக்கு  ரூ.5 தள்ளுபடி தரப்படும்.

வாடிக்கையாளர்கள் ஆன்-லைன் தவிர்த்து, கிரெடிட், டெபிட் கார்டுகள், இ-வாலட்கள்மூலமும் பணம் செலுத்தலாம். வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிக் கட்டணம் பணம் செலுத்தும் திரையில் தெரியும். அதில் ரூ. 5 கழித்துக்கொண்டு மீதமுள்ள தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்தலாம். கட்டணத்தின் ரசீதில் ரூ.5 தள்ளுபடி செய்யப்பட்டதும் குறிப்பிடப்பட்டு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ்சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.434.71 என்று வழங்கப்படுகிறது. இதில் இருந்து ரூ. 5 கழித்துக்கொண்டு பணம் செலுத்தலாம். சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தும் நுகர்வோர்களை அதிகமாக பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற்ற ஊக்கப்படுத்தும் விதமாக இதுபோன்ற தள்ளுபடிகளை அரசு வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.