பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சாமியார் ராம் ரஹீம் நீதிமன்றத்திற்குள் நீதிபதியின் முன்பு கண்ணீர் விட்டு கதறி அழுதார். 

தேரா சச்சா சௌதா ஆன்மிக அமைப்பின் தலைவராக திகழும் ராம் ரஹீம் சிங், 15 ஆண்டுகளுக்கு முன்னர் பக்தை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் எதிர்மறையான தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. 

லட்சக்கணக்கில் பக்தர்களையும் ஆதரவாளர்களையும் கொண்ட ராம் ரஹீம் சிங் மீது எதிர்மறையான தீர்ப்பு வந்தால் சுமார் 2 லட்சத்துக்கும் மேல் திரண்டுள்ள அவரது ஆதரவாளர்களால் வன்முறை அசம்பாவிதங்கள் நிகழக் கூடும் என்பதால், 144 தடை உத்தரவு, ராணுவம் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று செய்யப் பட்டிருந்தது. 

ஹரியானா மாநிலம் முழுவதுமே பெரிதும் பரபரப்புடன் திகழ்வதால், துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினரும் போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். 

இந்த நிலையில் இந்த வழக்கில் ராம் ரஹீம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது என்றாலும், தண்டனை குறித்த விவரங்கள் வரும் 28 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். 

இதையடுத்து போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி அவரது ஆதரவாளர்களால் ஹரியானா பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்றன. மேலும் இந்த கலவரத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். 

இந்நிலையில், இன்று தீர்ப்பு குறித்து வாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, சமூக சேவகரான ராம் ரஹீமுக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும்  அவர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். வாதம் நடைபெற்ற போது, சாமியார் ராம் ரஹீம் நீதிபதி முன்பு என்னை மன்னித்து விடுங்கள் என்று கதறி அழுதார்.