பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம்குற்றவாளி என சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் ஏற்பட்ட சேதத்துக்கான இழப்பீட்டை சாமியார் குருமீத்சிங் சொத்துக்களை விற்று வசூலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

2002ம் பெண் சீடர்களை பலாத்காரம் செய்ததாக தேரா சச்சா அமைப்பின் தலைவர்குர்மீத் ராம் ரஹீம் மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் குர்மீத் குற்றவாளி என அறிவித்தது.

இதைத் தொடர்ந்து சாமியார் குர்மீத்தின் ஆதரவாளர்கள் பஞ்சாப், அரியானாவின் பல பகுதிகளில் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டு பஸ்,கார், வாகனங்களை தீக்கிரையாக்கினர். போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதையடுத்து பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்த ஒருவர் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “ பஞ்ச்குலாவில் நடக்கும் கலவரம், சட்டம் ஒழுங்கு பிரச்சினையால், தடை விதிக்கப்பட்டு இருந்தும் 1.5 லட்சம் மக்கள் நகருக்குள் சென்று அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறார்கள். அமைதியை நிலைநாட்ட போலீசாருக்கும், மாநில அரசுக்கும் உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.சிங் சரோன், நீதிபதி அவினீஷ் ஜிங்கன், நீதிபதி சூரியா காந்த் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது-

 “ பொது சொத்துக்களுக்கு தேரா சச்சா சவுதா அமைப்பினர் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சேதம் குறித்து வீடியோ மூலம் பதிவு செய்து, அது குறித்த இழப்பு குறித்து கணக்கிட வேண்டும். அந்த இழப்புக்களை தேரா சச்சா சவுதா அமைப்பினரிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.

பஞ்சாப், அரியானா, சண்டிகர் அதிகாரிகள் எந்த விலை கொடுத்தேனும் சட்டம் , ஒழுங்கை பராமரிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியை நிலைநாட்ட அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையில், எந்த அரசியல் கட்சி தலைவரோ, அமைச்சர்களோ யாரும் தலையிடக்கூடாது. எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களோ, மதத்தைச் சேர்ந்தவர்களோ எந்த விதமான கண்டனத்துக்குரிய பேச்சுக்களையும், கருத்துக்களையும் கூறக்கூடாது. அவ்வாறு கூறினால் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்.

அமைதியை நிலைநாட்ட போதுமானஅளவுக்கு  ராணுவத்தினரை வரவழைக்க வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்றார்போலா போலீசார் ஆயுதங்களையோ, போலீசாரையோ பயன்படுத்தி நிலையை கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். கலவரத்தில் ஈடுபடுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அவர்கள் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.